அழகு
பார்த்தால் ஈர்க்கும
அழகான கன்னத்தில்
முத்தம்
பதித்தால் நான் சுவைப்பது
உன்
கன்னங்களைத் தான்!
சிரிப்பால் பிறக்கும்
கன்னக் குழிகளின்
அழகை
விரல் தீண்டினால்
உணர்வது
என்
விரல் நுனிகளைத் தான்!
எட்டி இருந்த என்னை
இழுத்த உன்
இடை அழகு
நான்
கட்டி அணைக்கையில்
கையில்
சிக்காமல் போனது தான்!
இப்படி
தொட்டாலும்
சுவைத்தாலும்
விளங்காத அழகு
என்
பார்வையின் கோளாறா
இல்லை
படைப்பின் கானலா?
***
பட்டாம்பூச்சி வாழ்க்கை
விளையாட்டு பிள்ளைன்னு சொல்லி
விடியல்ல ஸ்கூலுக்கனுப்பி
எம்மகன் எஞ்சினியர்ன்னு
எங்கப்பா முடிவு செஞ்சி
கல்யாணம்
கட்டி முடிச்சி
மணவாழ்க்கையில
முங்கி குளிச்சி
பிள்ளைங்கள
படிக்க அனுப்பி
அவங்க
பெரிசானதும் பெருமபட்டு
மகள
மாமியார் வீட்டுக்கனுப்பி
என் மனைவிய
மாமியாராக்கி
இப்ப
திண்ணையில சேர் போட்டு
தூங்கலாம்னு நினைக்கையில
பேட் புடிச்சி விளையாட
என் பேரன் என்ன
கூப்பிடுதான் !!!
முரண்

அம்மா,
பக்கத்து வீட்டு பையன் கிட்ட
இனிமே
படாம விளையாடுன்னு சொன்ன.
ஏறி இருந்த் பாவாடைய
உன் கண்ணாலயே எறக்கச் செஞ்ச.
பஸ்சில போகையில
எப்பவும்
பக்கத்துலயே ஒக்காரவச்ச.
சாமிக்கு முன்னாடியும்
என்
தாவணிய சரி செஞ்ச.
இப்ப
இந்த மஞ்ச கயிறுதான்
என் வாழ்க்கைன்னு
பால் சொம்ப கையில குடுத்து
பழகாத ஒருத்தனோட
படுக்கைக்கு போக சொல்ற !!
ஆதாம் வாழ்கிறான்
பேரூந்தின் நெரிசலில் உரசும்
கால்களிலும் தோள்களிலும்,
நடக்க இடமில்லா
நடைபாதைகளில்
உடை இடை
பாதிகளில்
விளையாடும் கைகளிலும்,
கண்களால் செய்யும்
கற்பழிப்பு
செயல்களிலும்
ஆதாம்
இன்னும்
வாழ்கிறான்.
சைட்
நெற்றியை சுட்டெரிக்கும்
வெய்யில்
சுவாசத்தை சூடாக்கும்
கரும்புகை
கழுத்தில் கனமாகும்
வியர்வை
ப்ரேக் பிடித்து
வலுவிழக்கும் கைகள்
என
எதுவும் தடையில்லை
என்
ஹார்மோன்களுக்கு.
அழகாய்தான்
இருக்கிறாய்
நீ.
சிவாஜி விலாஸ்
சென்னை மத்திய சிறைச்சாலையின் முன் ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்க, அதனுள்ளே இருந்த இன்ஸ்பெக்டர், பின்னால் உட்கார்ந்திருந்த சிவாஜியை பார்த்து “ஒரு பத்து இருவது பேர் வெளில இருக்காங்க, நீங்க கையில இருக்கிறதை கொடுத்தீங்கன்னா துணிக்குள்ள வச்சி எடுத்துகிட்டு போக வசதியா இருக்கும்,உள்ள வந்ததும் கொடுத்துடறேன்..”
சிவாஜி தன் கையில் இருந்ததை கொடுக்க, இன்ஸ்பெக்டர் அதை வாங்கி ஒரு துணிக்குள் சுற்றி மூடிக்கொள்கிறார்.சிவாஜி வெளியே இறங்கியதும்,
“தலைவா! எங்க அது .. எங்க அது..” என்று நின்றிருந்த இருபது பேரில் சிலர் கூச்சலிட, அவர்களை விலக்கிக்கொண்டு சிவாஜியை உள்ளே அழைத்து வந்தார், இன்ஸ்பெக்டர். உள்ளே ஒரு செல்லுக்குள் சிவாஜியை அனுப்பி, கதவை பூட்டப்போகும் போது,
“இன்ஷ்பெக்டர் அது…” என்று சிவாஜி கூற,
“சாரி இந்தாங்க” என்று துணியில் சுற்றிக்கொண்டு வந்ததை அவரிடம் தருகிறார். முதுகை காட்டிக்கொண்டு நிற்கும் சிவாஜி அதை வாங்கிக்கொள்ள, இன்ஸ்பெக்டர் இடத்தை விட்டு செல்கிறார்.
பக்கத்து செல்லில் இருந்தவர் சிவாஜியிடம்,
“ஏம்பா என்ன செஞ்சிட்டு உள்ள வந்த ? மர்டரா ?”
“இல்ல,,,”
“ரேப்பா..”
“இல்ல…”
“இன்டர்நெட்ல நீலப்படமா …”
“ஹாஹாஹா… இல்ல…”
“பின்ன என்னதான் செஞ்ச ?”
தன் கையில் இருந்த அந்த துணியை விலக்கி உள்ளே இருந்ததை வெளியே எடுக்கிறார் சிவாஜி,பொன் நிறத்தில் மின்னிகொண்டு நிற்கும் அதை கம்பிகளுக்கிடையே நீட்டி
“முட்ட போண்டா…”
பக்கத்து செல்லில் இருந்தவர் ஒரு நிமிடம் ஆடிப்போய்
“என்னப்பா இது.. எப்பவும் கேள்விபடாததாய் இருக்கே.. உன் கதைய சொல்லு” என்கிறார்.உடனே சிவாஜியின் கண் முன்னே மின்னல்-பின்னால் விரிகிறது (flash back தாங்கோ..)
மதமாற்றம்

எங்கள் ஊர்
மசூதியில்,
சில சில்லறைகளுக்காய்
பல பிச்சைகாரர்கள்
வெள்ளிக்கிழமைகளில்
மதம் மாறுகின்றனர்.
0o0o0o
புதைகுழிகள்
விடியாத இரவுகள்,
வெளிச்சப்புள்ளிக்கப்பால் வெறுமைகள்,
நீரின்மேல் நுசூற்று வரையும் நிசப்த வளையங்கள்,
மலைகள் வேலியாய் நீண்ட வயல் வெளிகளின்
நடுவே சிக்கிய ஒற்றை மரத்தின் தனிமை.
மனித கூட்டத்தின் மத்தியில் இருந்தும்
இவை சில மறக்காத நினைவுகள்.
சக்கரத்தின் ஒரு கம்பியாய் நானும் சுற்ற,
இனம் புரியா இருட்டு கைகொட்டி சிரிக்கும்.
உள்செல்வது உணரவே வெகுநேரம் பிடிக்க
புதைந்து கொண்டு இருக்கிறோம்.
கண்ணை மூடினால் பிரகாசமாய் தெரியும் கருப்பு புதைகுழிகள்.
மோகமுள்

தேன் வற்றிய தேன்கூடாய்
பிசுபிசுக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு.
விரலுக்கேற்ற மோதிரங்கள்
தொலைந்து போய்
மோதிரத்திற்காய்
விரல் வீக்கங்கள் !
தொட்டால் பூ மலருமோ என்னவோ
தொடாமல்
மரமாய் வளர்ந்து நிற்கிறது
என் மோகம்.
புறங்கை எச்சிலாய் நேற்றைய மிச்சங்கள்.
பசிக்காய் கேட்கிறேன்
ருசிக்கான சிந்தனைகளை சற்று
ஒத்திவை.
0o0o0o
ரோஜா
காதல் அச்சாரங்களாம் இந்த
காம்பில் தவம் செய்யும் ரோஜாக்கள்,
முட்களின் பாதுகாப்பில்
சிறையிருக்கும் ராணிகள்.
பருவம் அடைந்ததும்
பறிக்கப் பெறும் அப்பாவிகள்
பேதையில் துவங்கி பேரிளம்பெண் மட்டும்,
கொண்டை பூட்டில்
சொருகப் பெறும் சாவிகள்.
கல்யாணப் மாலைகளில்
மணம் வீசும் மெல்லினங்கள்,
எரிந்து போகும் சவங்களுக்காய்
இறந்து போகும் உடன்கட்டைகள்.
