காதல்

ஆகஸ்ட் 31, 2006 at 12:19 பிற்பகல் (காதல்)

       நெருக்கத்தின் உஷ்ணம் அந்தக் குளிருக்கு இதமாய் இருந்தது.ஜீரோ வாட் விளக்கின் வெளிச்சத்தில் மற்றுமொரு முறை அரங்கேறிக்கொண்டிருக்கிறது எனக்கும் உனக்கும் பிடித்த நம் தேடல் விளையாட்டு. உன் இறுக்கம் சில நேரங்களில் என்னை மூச்சு வாங்கச் செய்திருக்கிறது. இன்று ஏனோ இறுக்கம் சற்று தளர்ந்து இருக்க, உஷ்ணம் சற்று குறைந்துதான் போயிருந்தது.எனினும் விலகுவதாய் இல்லை. உணர்வு இழைகள் ஒருமுறை பின்னி உணர்ச்சி சாறை பிழிந்தபின், பால்குடித்து முடித்த குழந்தையின் நிற்கப்போகும் அழுகையானது உன்
உஷ்ணம். என் நெற்றியில் முத்தமிட்டு, நீ திரும்பிப்படுத்த போது கூட ஏனோ ஒரு முழுமையின்மை என்னை முழுதாய் ஆக்ரமித்திருந்தது.அதே நிலையில் வெகு நேரம் இருக்கவேண்டும் போலத் தோன்றியது.ஓடிக்கொண்டிருந்த காற்றாடி சிந்தனைகளையும் ஒரு சேரவிடாமல் கலைத்துக்கொண்டிருந்தது.

 உன்னை நான் முதன்முதலில் எங்கே சந்தித்தேன் ? சரியாக நினைவுக்கு வரவில்லை. ஒரு வேளை மெரீனாவிலா ? அது ஏன் நம் முதல் சந்திப்பின் நினைவு என்னுள் நிற்காமல் போனது ? காதலெனில் அந்த முதல் சந்திப்பில் பரிமாறப்படுகின்ற பார்வைகள் ஆயுளுக்கும் நினைவில் நிலைத்திருக்குமாமே ? இது எல்லோர்க்கும் பொதுவான ஒரு விதிமுறையா, இல்லை யாரோ ஒருவனின் பார்வையை உலகம் தழுவியதால், இன்று வரை நிஜமான ஒரு பொய்யா ? தெரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நம் உணர்ச்சி பர்஢மாற்றங்களை தாண்டி ஏதோ ஒன்று பல சமயங்களில் உன்னை நான் நினைத்து பார்க்க்கும் படி செய்கிறது. உன்னிடத்தில் ஏதோ ஒரு விஷயம் எனக்கு பிடித்திருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடிப்பதில் இவ்வளவு சிரமமா ? இதமானதொரு மெல்லிசையில் மெய்போலத் தோன்றும் கற்பனைகளின் அணிவகுப்பு போல உன்னை பற்றிய சிந்தனைகளில் பல நேரம் வந்து போவது ஏன் ? இதேபோல் உனக்கும் எப்போதாவது தோன்றுவது உண்டா ? 
ஒரு வித சந்தோஷ அமைதியில் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.. கண்ணை மூடினாலும் ஏனோ தூக்கம் மட்டும் சிந்தனைகளால் விரட்டப்பட்டு இமை திறந்து வெளியோடப் போராடிக் கொண்டிருக்கிறது. மின்விசிறியின் சுழற்சி மேலும் பல சிந்தனைகளை சுழட்டிகொண்டு வந்து மூளையில் அடைக்கிறது.

      எப்போது உறங்கிப் போனேன். தெரியவில்லை..அனிச்சையாய் வந்த கொட்டாவியை விட்டு, நேரம் பார்க்கத் திரும்பினேன். உள் அறையில் இருந்து விளக்கு வெளிச்சக் கீற்றுகள் கட்டிலின் அருகில் பாதை அமைத்திருந்தது. நேரம் பார்த்தேன். 4:30. இத்தனை சீக்கிரம் எழுந்து என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ ? அருகில் இருந்த உன் டீ-ஷர்ட்டை எடுத்து போட்டு கொண்ட போது ஏதோ ஒரு வித அணைப்பு என்னை
இருக்கியது போல இருந்தது. இது இன்றைக்கென்றில்லை, உன்னை அறியத்துவங்கிய சில மாதங்களிலேயே, ஏதோ ஒரு வித இதத்தை அளிக்கு விஷயமாய் எனக்கு தோன்றும்.. உனக்கு இது போன்ற எண்ணங்கள் உண்டா என கேட்க நினைத்திருக்கிறேன்..
“என்ன இது ஏதோ சினிமால வர சீக்குவென்ஸ் மாதிரி சொல்ற” என்று தான் நீ சொல்லுவாய் என்னும் எண்ணம், இன்று வரை இதை நான் உன்னிடம் கேட்காமல் இருக்கச் செய்திருக்கிறது.சில நேரங்களில் வாழ்க்கையின் அர்த்தங்களே இந்த அர்த்தமற்ற சிலிர்ப்புகளில் தான் இருப்பதாய் தோன்றும்.

    தலைமுடியை சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டே, கட்டிலை விட்டிறங்கி உள் அறையை நோக்கி நடந்தேன். உள்ளே நீ கண்ணாடியின் முன் நின்று, குளித்து முடித்த தலையை சீவிக்கொண்டிருந்தாய். சில விநாடிகள் உன் பின்னால் நின்று கண்ணாடியில் தெரியும் உன்னை வெறித்தபடி இருந்தேன். என்னை கண்ணாடியின் பிம்பத்தில் பார்த்து உன் புருவங்களை கேள்விக்ககுறியாய் உயர்த்தினாய்.. பின்னர் உதடுகளை குவித்து நீ தந்த ஒரு முத்தத்தை என் பிம்பம் பெற்றது. ஏதோ ஒரு உணர்வு உந்தித் தள்ள, நான் உன்னை பின்னால் இருந்து அழுந்தக் கட்டிக்கொள்வேன் என்று நீ சற்றும் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். திரும்பி நின்று, வெறும் டீஷர்ட் மட்டும் அணிந்து, உன்னை கட்டி நிற்கும் என்னை மேலிர்ந்து கீழ் வரை நீ பார்த்தபோது, ஏனோ எனக்கு லேசாய் எங்கேயோ சிலிர்த்தது.. இது போன்ற சிற்சில சிலிர்ப்பு ஓடைகள் உன்னால் மட்டுமே என்னுள் அவ்வப்போது ஓடிநிற்கும்.

“என்ன எழுந்துட்ட … தூக்கம் வரலையா ?”
“தெரியலை”
உன் கழுத்தில் கைகோர்த்து இருந்த என்னை இடுப்பில் கைவைத்து உன்னருகில் இழுத்தாய்.. இதோ இன்னொறு சிலிர்ப்பு பிரவாகம்.
“சரி.. முதுகுல லேசா வலிக்குதுன்னு சொன்னியே.. டாக்டர் கிட்ட போனியா ?”
“இல்ல”
“ஏன்”
“போகணும்னு தோணலை..”
“இதுக்கெல்லாம் தோணனுமா என்ன.. ஒரு தடவை போயிட்டு வந்துடு…நான் வேணும்னா மந்தவெளில இருக்கிற ஒரு டாக்டர் கிட்ட
அப்பாயிண்ட்மென்ட் வாங்கி தர ஏற்பாடு பண்றேன்”
“இல்ல வேண்டாம்..”
“என்ன வேண்டாம் .. இதெல்லாம் இப்படியே விட்டா பின்னால பாதிக்கும்.. “
“இல்ல வேண்டாம்..”
நீ பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும் சில சந்தர்பங்களில், இதுவும் ஒன்று.
“என்ன வேண்டாம்.. என்னவோ போ.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. இது போல எனக்கு தெரிஞ்ச சில பேர்.. கொஞ்ச நாள்லயே முதுகு வலி, கழுத்து வலின்னு நின்னிருக்காங்க.. அதான் சொல்றேன்..”
“இல்ல வேண்டாம்..” உன் உதடுகளின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த நான் தன்னிச்சையாய் சொன்ன வார்த்தைகள்.
“என்ன வேண்டாம்.. நான் சொன்னதையே கவனிக்கலைன்னு நினைக்கிறேன் ?”
உன் முகம் லேசாய் சலிப்படைந்ததை கண்டேன். இந்த ரம்யமான கணங்களை கலைக்க மனமில்லாமல், பேச்சை திசை திருப்ப நினைத்தேன்.
“என்ன இது இடுப்புல அழுக்கு மாதிரி.. “
“எங்கே..?”
“இங்கே..” என்று நான் இடுப்பில் விரல் வைத்து அழுத்த
“ஏய்.. என்ன பண்ற.. வேண்டாம் கையை எடு.. கூசுது…”
“இல்லே மாட்டேன்…”
“சொல்றேனில்ல எடு..”
“ம்ஹும்..”
“அப்ப உன் நடுத்தொடைல இருக்கிற இந்த அழுக்கை எடுத்துற வேண்டுயதுதான்…”
உன் விரல்கள் என் தொடையில் இருந்த மச்சத்தை மொத்தமாய் அழுத்தி இழுக்க..
“ஆவ்வ்… வேண்டாம்…நோ….” என்று வார்த்தைகள் வெளியே வந்தாலும், சத்தியமாய் சொல்கிறேனடா..உன்னை கட்டிக்கொண்டபடி நிரைவோடு என் நிறைவை எதிர்கொள்ளவும் நான் தயார். எத்தனை உயரம் எறிந்தாலும் மறுபடி கீழே விரையும் ஒரு பந்தைபோல, உன் உயிரீர்ப்பு என்னை இழுத்துக் கொண்டே இருக்கிறது.இதில் ‘அப்படி என்ன செய்துவிட்டாய் நீ’ என்கிற கேள்விகள், அர்த்தமற்றதாய் பொய்த்து போகிறது.
ஏன் இத்தனை மோகம் உன்மேல் எனக்கு. சில கேள்விகளுக்கு விடை எளிதில் கிடைப்பதில்லை. முத்தத்தினால் எவர் உதட்டை எவரும்
உண்பதில்லை. எந்த ஒரு சாறும் அதனின்று வழிவதில்லை.. உணர்ச்சி விலக்கிப் பார்க்கின் அது இரு தசைகள் ஒன்றோடொன்று அழுத்திக்
கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.இருந்தாலும் யாரும் முத்தம் இடுவதை நிறுத்திய பாடில்லை..அதுபோலத் தானடா உன் மீதான என் ஈர்ப்பும்.இன்னதென்று விளக்க இயலத்தோர் நிலையில் இருக்கிறேன்.உன் பற்களின் சுவடு என் உதடுகளில் பதிந்த அழுத்தத்தால், கற்பனையில் கர்ப்பம் தரித்திருக்கும் என்னை மீண்டும் பூமியில் பிறக்கச் செய்தாய்.வலித்தாலும், உன்னோடு ஒட்டிக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது. மீண்டும் ஒருமுறை உனக்கும் எனக்குமானதொரு உணர்ச்சிகளின் ஒப்பந்தம், அரங்கேறத் துவங்குகின்ற நிலை. உணர்வுகளால் தூண்டப்பெறும் உணர்ச்சிகளுக்குத்தான் எத்தனை சத்து, எத்தனை அழுத்தம். நேற்றய ஆட்டத்தில் நீ தோற்றதை, இன்று ஜெயிக்கப் பார்க்கிறாயோ ? இந்த முறை உன் அழுத்தத்தின் வீரியம் என்னை மூச்சுமுட்டச் செய்தது. இந்த அரங்கேற்றத்தை கடிகாரம் ஐந்து முறை மணியடித்து கலைத்தது.

ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு சென்று, உன் பெட்டியிலிருந்து உன் சட்டையை நீ உடுத்துவதை, நாசியை உறுத்தாத மெல்லிய சென்ட் அடித்துக் கொண்டதை, வாட்ச் கட்டிக் கொண்டதை, தலை சீவிக்கொண்டதை என நீ செய்த எல்லாவற்றையும் ஏனோ பார்த்துக்
கொண்டே நிற்கிறேன்.
“ஏய்.. என்ன என் டீ-ஷர்ட்டை போட்டுகிட்டே இருக்க ? சீக்கிரம் அவுத்து குடு , நான் கிளம்பணும்.. “
“இல்ல இது எனக்கு வேணும்..”
“என்ன நாள் பூரா இப்படி வெறும் டீ-ஷர்ட்டை மட்டும் போட்டுகிட்டு நிக்க போறியா.. போ போய் ஏதாவது சுடிதார் ஒண்ணு போட்டுகிட்டு வா..”
“இல்ல .. எனக்கு இந்த டீ-ஷர்ட் போதும்..”
“நீ மறுபடியும் அப்படி பாக்காத… அப்புறம் எனக்கு போக மனசே வராது..”
“அப்ப போகாத…”
“நீ சரியான…சரி நான் அப்போ வரேன்.. இந்தா செலவுக்கு வச்சிக்கோ..”
‘எனக்கு வேண்டாம்..”
“ஏய் என்னாச்சு ஒனக்கு.. இன்னிக்கு பயங்கர மூட்ல இருக்க போல… இந்தா பிடி…நான் ட்ரிப் போயிட்டு மறுபடி வரதுக்கு எப்படியும் பதினஞ்சு நாளாவது ஆகும்”
“எனக்கும் இது வேண்டாம்..”
“வேற என்ன வேணும்.. “
நீ தானடா வேண்டும்.. உன் அருகாமை ஒன்று மட்டுமே நான் ஏங்கித்தவிக்கும் ஒரே விஷயம்..
“என்னவோ போ..நான் வரேன்”.

ரோட்டில் அவன் போவதையே வெகு நேரமாய் மாடி ஜன்னலிலிருந்த்து வெறித்துக் கொண்டிருக்கிறேன். டெலிபோன் மணி அடித்த சத்தம் தொலைவில் கேட்பது போல துவங்கி, என்னை நிஜத்திற்கு கொண்டு வந்தது.
“ஹலோ..”
“நான் தான் முத்து பேசறேன்..”
சிறிது நேரம் ஏனோ யாருடனும் பேசவே தோன்றவில்லை..
“ஹலோ.. ஹலோ.. “
சிறிது இடைவெளிக்கு என் தொண்டை மவுனம் பேசிப் பழகியது.
“ஹலோ..”
“நான் தான் முத்து பேசறேன்..”
“சொல்லு..”
“ஒண்ணுமில்ல.. நம்ம அய்யாவுக்கு வேண்டப்பட்ட ஒரு பார்ட்டி … முட்டுகாடு பங்களால தங்க வச்சிருக்கார்.. இதபாரு.. ரேட்டு விவகாரம் எல்லாம் நான் பேசிட்டேன்..நீ எதும் ரேட்டு கீட்டு பேசாத அங்க.. பார்ட்டி அய்யாவுக்கு வேண்டியவங்க.. சாயங்காலம் போயிடு.. ரெண்டு நாளைக்கான துணி மணியோட…மறக்காம செல் எடுத்துட்டு போ.. நான் மிச்சத்த அப்புறம் போன் பண்ணி சொல்றேன்..சரியா”
மெதுவாய் நாசி துவாரங்களில் எரிச்சல் மிகுந்து, ரத்தம் வருவது போன்ற ஒர் உணர்வு பரவத் தொடங்கியது.
“ஹலோ.. என்ன கேட்டிச்சா…”
“ம்ம்..”
“அப்போ சரி நான் வச்சிடறேன்..”

OoOoOoOo

1 மறுமொழி

  1. ராசா சொன்னது,

    முதல் முறை இங்க வர்றேன்..

    நல்லாயிருக்கு.. :)
    மறுபடி ஒரு முறை முழுசா படிச்சுட்டு வர்றேன்..

மறுமொழியொன்றை வழங்குக