ரோஜாத்தோட்டம்

ஆகஸ்ட் 29, 2006 at 3:47 மு.பகல் (ரோஜாக்கூட்டம்)

முன் குறிப்பு: 

ஆனந்த விகடன் நடத்திய ”படத்திற்கு கதை எழுதவும்” போட்டிக்கு எழுதிய கதை. படம் கிட்டத்ட்ட கீழே உள்ளது போல இருந்தது.

விஜயவாஹினி ஸ்டுடியோவின் உள்ளே அந்த பெரிய க்ரவுண்ட்டில் ஒரு பார்க் செட்டிங் அமைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. புல்லட்பூபதி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஏன்பா அந்த மொல்டட் ஸ்டெப்ஸை எடுத்துக்கிட்டு வந்து இந்த இடத்துல வைங்க.. அப்புறம் ராஜா நீ அந்த ரெண்டு பெஞ்சையும் கொண்டு வந்து, ஒண்ணு இந்த் சைட், மத்தது அந்த பக்கமாவும் போடச் சொல்லு”
“ஓ.கே சார் ..”
செட்டின் ஒரு மூலையில் நின்று கொண்டு அதன் பர்ஸ்பக்டிவ் (Perspective View) பார்த்தார். திருப்தி அடைந்துவிட்டார் போலும், மெதுவாய் தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து, சிகரெட் ஒன்றை வாயில் வைத்தபடி, மூலையில் போடப் பட்டிருந்த சேரில் உட்கார்ந்தார். நான் உடனே அவர் அஸிஸ்டன்டிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் சென்றேன். லைட்டரை தேடிக்கொண்டிருக்க ஓடிச்சென்று பற்ற வைக்க நெருப்பு காட்டினேன். நிமிர்ந்து பார்த்தார்.

“அட வாங்க மாமு ! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் ?”
“ஒய்ப்க்கு டெலிவரி .. ரெண்டு மாசமா அது சம்பந்தமாவே அலைய வேண்டியதாய் போச்சு.. அதான்..”
“நான் கூட நினைச்சேன் சில சமயம்.. என்னடா மனுசன் பட பூஜையிலேர்ந்தே ஆஜர் ஆயிடுவாரே .. என்ன காணோம்ன்னு .. அப்புறம் .. ச்சீ .. பாருங்க நீங்க விஷயத்த சொல்லியும் எனக்கு உறைக்கவேயில்ல … கங்கிராஜுலேஷன்ஸ்.. பாய் ஆர் கேர்ள் ? “
“பையன் தான் சார்.. “
“டெலிவரி நார்மல் தானே ..?”
“ஆமாம் சார்..”
“குட்.. அப்புறம் ?”
“உங்களுக்கே தெரியும் .. நம்ம டைரக்டர் கிட்ட ஒரு இன்டர்வியூ வேணும் … ரொம்ப நாளா டிரை பண்ணிகிட்டிருக்கேன்.. ஆனா முடியலை.. உங்ககிட்ட கூட சொன்னேனே .. போன தடவை பார்த்த போது.. அப்ப தானே சொன்னீங்க .. அடுத்து நீங்க பண்ற படத்துக்கு அவர் தான் டைரக்டர்ன்னு …”
“சொன்னேனா ? இருக்கும் .. எனக்கு இருக்கிற டைட் ஸ்கெட்யூல்ல இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்குது.. எனிவே.. இன்னிக்கு டிரை பண்றேன் .. ஆனா கன்பர்ம்டா சொல்ல முடியாது..”
“நீங்க மனசு வச்சா முடியாதா … கொஞ்சம் முயற்சி பண்ணுங்க சார்..”
“இல்ல மாமு .. உங்களுக்கே தெரியும்.. ஆள் இன்டஸ்டிரில பெரிய மனுஷன்.. வழக்கமா ஆனந்த விகடனுக்கே யோசிச்சி தான் பேட்டி குடுப்பார்..உங்க பத்திரிக்கை வேற ரொம்ப சின்னது..சரி விடுங்க .. நீங்க நமக்கு தெரிஞ்சவர் .. அதுனால மட்டும் தான் நான் டிரை பண்றேன்..”

அதான் படிச்சிருக்கேனே அந்த பேட்டியை எல்லாம்.. ஏதோ இவனுக்கு மட்டும் தான் உலகத்துல படம் எடுக்க தெரிஞ்சா மாதிரி. எல்லாம் என் நேரம் என்று நினைத்தேன்.

“என்ன மாமு, பதிலையே காணோம் ?”
“ஒண்ணும் இல்லங்க .. என்ன என்ன கேள்வி கேக்கறதுன்னு மனசுக்குள்ள அசை போட்டுகிட்டிருந்தேன்..”
“ஒண்ணு பண்ணுங்க அங்க கட்டி வச்சிருக்காங்க பாருங்க எருமை மாடு அது பக்கத்துல போய் நின்னுகிட்டீங்கன்னா ரெண்டு பேரும் சேர்ந்து அசை போடலாம்..” என்றுவிட்டு ஊருக்கே கேட்கும் படி பான் பராக் கரை பற்கள் தெரிய சிரித்தார். “சும்மா ஜோக்குக்கு சொன்னேன் .. கோவிச்சுகிட்டீங்களா ?” என்று மறுபடி சிரித்தார்.
“இல்ல சார் ..” என்று லேசாக ஒரு புன்னகையை உதிர்த்தேன். மனசுல பெரிய காமெடி கிங்ன்னு நினைப்பு .. ஏன்யா உங்க வீட்ல எல்லாம் கண்ணாடியே இல்லயா ..? என்ன சொல்லிட்டன்னு இப்படி சிரிக்கிற ? மனதில் பல கேள்விகள் எழுந்தாலும் , புன்னகை மாறாமல் நிற்கும் என்னை நினைக்க எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வருடம் முன்னால் வரை முத்தாரத்தில் ரிப்போர்டராக இருந்தவன். ஒரு வருடம் முன்னால் நண்பர்கள் சிலரின் கட்டாயத்தில் அவர்கள் துவங்கிய ஒரு வார இதழில் பார்ட்னராக சேர்ந்தேன். அப்போது பிடித்தது சனி என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து எல்லா விஷயங்களுக்கும் அலைச்சல் தான். எளிதாக நடந்தாக சரித்திரம் இல்லை.. இப்போது அதன் தொடர்ச்சியாய் ‘இந்த ‘மாக்கான்’ டைரக்டரின் பேட்டியை எப்படியாவது நீ தான் எடுத்து வர வேண்டும், நீ தான் சினி இன்டஸ்டிரியில் நிறைய கான்டாக்ட்ஸ் வைத்திருப்பவன் ‘ என்றெல்லாம் பேசி ஒரு வழியாய் இதை என் தலையில் கட்டிவிட்டான் என் நண்பன்.

இதற்குள் அவர் சிரித்து முடித்திருந்தார்.

“சரிங்க  மாமு, நீங்க செட்டுக்கு வெளிய, அங்க ஒக்காந்திருங்க .. நான் போய் பாத்துட்டு வரேன்..” என்றுவிட்டு பான் பராக் நிரம்பிய எச்சிலை அருகில் துப்பினார். பார்க் செட்டிற்கு ஒரு நேட்டிவிட்டி குடுக்கிறார் போலும். பொது இடங்கள்ள பான் பராக் போடக் கூடாதுன்னு சொன்னா மட்டும் இவன்களெல்லாம் திருந்தவா போறாங்க. கேட்டா இது பொது இடம் இல்லன்னு சொல்லுவாங்க .. எனக்கே என்னை நினைக்க சிரிப்பாய் வந்தது. நான் எப்போது இவ்வளவு பொது சிந்தனை கொண்டவனானேன் ? எதற்கு இந்த தேவையில்லாத ஆராய்ச்சி, வேலையை பார்ப்போம் என்று நினைத்து செட்டின் ஓரத்தில் போடப்பட்டிருந்த மேடையில் உட்கார்ந்தேன்.

புல்லட்டின் உதவியாளர், மேலும் என் நண்பர் ராஜா என்னை பார்த்து கை அசைத்து மெதுவாய் அருகே வந்தார். ராஜா ஒருவர் மட்டும் நார்மலானவர் அந்த கும்பலில். என் நல்ல சிநேகிதர்.

“என்ன மாமு எப்படி இருக்கீங்க ? “
“ஏதோ உங்க புண்ணியத்துல சவுக்கியம்..”
“என் புண்ணியமா, நீங்க வேற நிலமை தெரியாம பேசாதீங்க .. அப்புறம் ஒய்ப் டெலிவரி எல்லாம் முடிஞ்சதா ? ஆணா, பொண்ணா ? “
“ஆண் தான் .. தாய் சேய் இருவரும் நலம்..”
“என்னங்க டி.வி ல தாய் சேய் நலம் பத்தி சொல்ற மாதிரி சொல்றீங்க ?”
“என்னங்க செய்ய , குழந்தை பிறந்தா சந்தோஷப்படணும், ஆனா செலவுகள் மேலே ஏறி பயமுறுத்துதே…”
“எல்லார்க்கும் அதே தான்.. விடுங்க.. ஆமா என்ன விஷயமா சாரை பாக்க வந்தீங்க ?”
“எல்லாம் ஒரு பேட்டி விஷயமா தான். படத்தோட டைரக்டர் தானே இன்னிக்கி லீடிங் ? அதான்..ரொம்ப நாளா டிரை பண்றேன் .. ஆள் சிக்க மாட்டேன்றார்.”
ராஜா கேட்டுக்கொண்டே ஒரு சிகரெட்டை வாயில் வைத்து என்னிடமும் ஒன்றை நீட்டினார்.
“நோ தாங்க்ஸ்..”
“அப்ப லைட்டர் வச்சிருக்கீங்க ?”
“அது மத்தவங்களுக்கு.. இந்த மாதிரி யாரையாவது சந்திக்க போனா அப்படியே அவங்களுக்கு சிகரெட் பத்த வச்சி அப்படியே பேட்டி கேக்க வசதி அதான்..”
“அய்.. அப்ப நாங்க மட்டும் சிகரெட் பிடிச்சு சாகணும், சுத்தம் அப்படி இப்படீன்னு பேசற நீங்க மட்டும் அதை தூண்டற மாதிரி லைட்டரோட அலைவீங்க ..என்னங்க நியாயம் ..” என்று சிரித்தார்.
சிரித்துக் கொண்டே கேட்டாலும் உள்ளுக்குள் ‘சுறுக்’ என்றது. இனிமேல் வேற எதாவது டெக்னிக் யூஸ் பண்ண வேண்டியது தான்.
“ஆமா ராஜா இன்னிக்கு என்ன சீன் ? என்ன சப்ஜெக்ட் இந்த படம் ?”
“யாருக்கு தெரியும் ? செட் போடறதோட நம்ம வேலை ஓவர் ..”
“அய் .. உங்களுக்கு தெரியாமலா சொல்லுங்க ..”
சுற்றி ஒருமுறை பார்த்தவர், குரலை தாழ்த்திக் கொண்டு “எதையும் வெளிய சொல்லக் கூடாதுன்னு கண்டிப்பான இன்ஸ்டிரக்ஷன்.. அதான்.. ஏதோ சயன்ஸ் சப்ஜெக்ட்ன்னு சொன்னாங்க .. இது வரைக்கும் எடுத்ததை பார்த்தா மாரியம்மன் படம் மாதிரி இருக்குது.. ஒண்ணும் புரியலை. வெளியே விட்டுடாதீங்க..ப்ளீஸ்”
“ஒ.கே ராஜா தாங்க்ஸ்.. ஆமா அது என்ன எருமை மாடு ஒண்ணு நிக்குது ? வழக்கம் போல ஹீரோ பால் காரனா ?  “
“இல்லீங்க அது ஏதோ ஒரு சீன்ல வருதுன்னு மட்டும் தெரியும்.. ஆனா எதுக்குன்னு தெரியாது..”
அதற்குள் ராஜாவை புல்லட் கையசைத்து கூப்பிட , “அப்போ பாக்கலாம் சார் .. நான் வரேன்”
“ஒ.கே ராஜா.. தாங்கஸ்..”

மணி கடிகாரத்தில் பன்னிரண்டு என்று காட்டியது. காலையில் பத்து மணிக்கு வந்தவன், இதே இடத்தில் பைத்தியம் போல உட்கார்ந்துகிட்டிருக்கேன். குழந்தைக்கு வேறு பால் பவுடர் மற்றும் பேபி பவுடர் வாங்கணும். அதையாவது செஞ்சிட்டு வந்திருக்காலாம். வெய்யில் வேற மண்டைய பொளக்குது.. எனக்குள் நானே புலம்ப ஆரம்பித்தேன். அதோ வருவது புல்லட் தானே.. அப்பாடா ஒரு வழியா வந்தான்யா இவன்..
“என்ன சார் என்ன ஆச்சு .. பாக்கலாமா அவரை ?”
“இல்ல மாமு… சார் கொஞ்சம் மூட் அவுட்.. செட்ல அவருக்கு கொஞ்சம் பிடிக்கலை.. மனுஷனை திருப்தி படுத்தறது பெரும் பாடு .. யப்பா” என்றுவிட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார்.
ஆமாம் அவர் ஆஸ்கர் ரேஞ்சுக்கு படம் எடுக்கிறார். அதுக்கு இவர் டைடானிக் ரேஞ்சுக்கு செட் போடறார். போங்கடா என்று திட்ட வேண்டும் போல இருந்தது. இவன் எல்லாம் பெரிய மனுஷன்னு இவன் பேட்டியை வேற மக்கள் எதிர் பாக்கிற இந்த கொடுமைய எங்க போய் சொல்ல.. எல்லாம் என் நேரம்.

“சார் நான் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது.. கொஞ்சம் டிரை பண்ணுங்க சார்.”
“இப்போ ரொம்ப கஷ்டம் மாமு.. “
“ப்ளீஸ் சார் , கொஞ்சம் டிரை பண்ணுங்க .. நீங்க நினைச்சா முடியாதா ?”
எனக்கே நான் ஒரு பிச்சைக்காரன் போல நிற்பதாகப் பட, குவிந்திருந்த கைகளை மெதுவாக தலை பக்கம் தூக்கி முடி கோதுவது போல ஆக்டிங் செய்தேன்.
“அதுவும் கரெக்ட தான்.. ஒண்ணு பண்ணுங்க .. நீங்க என் கூட செட்டுக்கு வாங்க நான் அவரை அறிமுகம் செய்யறேன் .. அதுக்கப்புறம் உங்க சாமர்த்தியம் .. என்ன ?”
புதுதெம்பு கொண்டவனாய் “சரி சார்” என்றேன்.

செட்டை சுற்றி அமைக்கப் பட்டிருந்த கீத்து வேலியை தாண்டி உள்ளே சென்றோம். காலையில் பார்த்த அந்த பார்க் செட்டிங்கில் இப்போது ஒரு நாலு ஜோடி சைட் ஆர்டிஸ்ட் உட்கர்ந்திருக்க, கேமரா எதிர் மூலையில் இருந்தது. செட்டின் மூலையில் ஒருவர் எருமை மாட்டை பிடித்துக்கொண்டு நின்றார்.
கேமராவின் பக்கத்தில் ஒரு சேரில் படத்தின் ஹீரோயின் கேஷன் அமர்ந்திருக்க, பக்கத்தில் அந்த மாமேதை டைரக்டர் அமர்ந்திருந்தார். ஏதோ விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். புல்லட் அங்கு போய் நின்று கொண்டு என்னை மெதுவாக அழைத்தார்.

ஹீரோயினிடம் பேசிக்கொண்டிருந்தவரை, இடைமறித்து “சார்.. ” என்றார்.
“என்ன புல்லட் என்ன விஷயம் ? சொன்னபடி ஆல்டரேஷன் பண்ணிட்டீங்க இல்ல ?”
“ஆச்சு சார்” என்றபடி என் கையை பிடித்து இழுத்து “இவர் நம்ம க்ளோஸ் ப்ரெண்ட் .. மாமு”
என்னை அறியாததால் சற்றே குழப்பத்துடன் கை குலுக்கினார்.
“எனக்கு ஞாபகம் இல்லையே ?”
“அதான் சார் நம்ம விடிவெள்ளி பத்திரிகை இல்ல, அதோட சீப் எடிட்டர் கம் ரிப்போர்ட்டர்..”
அதுவரை ஏதோ ஸ்வாரசியமாய் எதிர்பார்த்தவர், பத்திரிகை என்றதும் முகம் சற்றே கோணல் ஆகியது.
“ஓ.. ஓ.கே.. எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..”
“நீங்க எப்போன்னும் சொல்லுங்க .. மாமு வெய்ட் பண்ணுவார்” என் சார்பாக புல்லட்டே முடிவு எடுக்க ஆரம்பித்தார். எரிச்சலாக வந்தது.
“இன்னும் ஒரு ஒன் அவர் .. மே பி டூ.. ஏன்னா உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் பிஸி.. எஸ்பெஷலி வித் திஸ் ப்ரோஜக்ட்..” என்றுவிட்டு “டோ ன்ட் யூ அக்ரீ மிஸ் கேஷன் ? ” என்று வழிந்தார்.
அதற்குள் புல்லட் “அப்போ இவர் இங்க இருந்து ஷூட்டிங் பாக்கறதுல பிரச்சனை ஏதும் இல்லையே சார் ..”
அவர் சந்தேகத்துடன் பார்த்துவிட்டு, “பாத்ததை பத்திரிகையில் எழுத மாட்டார்ன்னா ஒக்கே.. ஏன்னா விகடனுக்கே நான் அனுமதி குடுக்கலை.. உங்க ப்ரெண்ட்ன்னு சொல்றதுனால… என்ன சார் ஒக்கே வா ? ” என்றார்.
“ஓ.கே சார் .. ” என்றேன் பள்ளிக்கூட மாணவன் போல..

ஷூட்டிங் துவங்க ஆரம்பித்து “க்ளாப் ” செய்யப்பட்டதும், செட் அமைதியானது. நானும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
சைட் ஆர்டிஸ்ட் ஜோடிகள் நான்கு பெஞ்ச் மேலேயும், சுவரின் மேலேயும் உட்கார்ந்து கொண்டிருக்க, ஆக்ஷன் என்று சொல்லப்பட்டதும், ஹீரோயின் தன் காரை விட்டு இறங்கி , அறைகுறை தமிழில் ஏதோ ஒரு வசனம் பேச, முன்னால் நினறவர் ஏதோ பதில் சொன்னார்.
“எல்லத்தையும் ரீ-ரிக்கர்டிங் ல பாத்துப்போம் ” யாரோ ஒருவர் எப்போதோ என்னிடத்தில் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
வசனம் பேசி முடிந்தவுடன் கேஷனை இருவர் எருமை மாட்டின் மீது ஏற்றிவிட, ஒருவர் நன்றாக குனிந்தபடி அந்த எருமை மாட்டை நகரச் செய்தார்.
கேஷன் கையை உயர்த்தியபடி ஏதோ சொல்ல, சைட் ஆர்டிஸ்ட் கும்பல் சிரித்தது. உடனே கேஷன் கையைக் கொண்டு ஏதோ வீசுவது போல
சைகை செய்ய, இரண்டு கோஷ்டிகள் மயக்கம் வந்தது போல கீழே விழுந்தன.
“கட்” என்றார் டைரக்டர்.
உடனே அனைவரும் கலைந்து செல்ல, டைரக்டர் கேஷனை நோக்கி சென்றார்.
நான் கடிகாரத்தை பார்க்க மணி மூன்று என்றது. வெய்யிலின் கொடுமை வேறு .. எரிச்சலில் ஏதும் பேச முடியாமல் நின்றேன்.
“என்னங்க கொழந்தைக்கு பால் பவுடர் நேத்தோட தீர்ந்து போச்சு மறக்காம வாங்கிட்டு வந்திருங்க .. என்ன ..” ப்ரியா சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்திற்கு வந்தது.

 ராஜா தென்பட, அருகில் அழைத்து ரகசியமாய் “என்னங்க.. என்ன எழவு இது ? இந்த காலத்துல இப்படி ஒரு படமா ? என்ன காமெடியா ? “
“இல்லீங்க ..  அந்தம்மா கேரக்டர் உலகத்துல என்ன அநியாயம் நடந்தாலும் பொறுத்துக்க மாட்டங்களாம்.. காலேஜ் பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்டாம்.. அப்போ அவங்க ப்ரெண்ட் ஒருத்தி ராகிங்ல செத்துப் போக, அதிலிருந்து இந்த அம்மாவுக்கு அப்பப்ப இந்த மாதிரி தோண ஆரம்பிச்சிடுமாம்.. ஏதோ சிக்கோவோ .. என்னவோ சொன்னாங்க.. “
“ஓ .. ஸ்கிட்ஸொப்ரீனியா வா ?”
“அட அதே தான்.. அதுனால பார்க்ல யாரும் இல்லைனாலும் அந்த அம்மாவுக்கு இருக்கிற மாதிரி தோணுமாம். அந்த சீன் தான் இப்ப எடுத்தாங்க”
“அதுக்கு எருமை மாடு எதுக்குங்க ?”
“அவங்களுக்கு சயன்ஸ் மூவீஸ் நிறைய பாக்குற பழக்கமாம், அதுனால எருமை மாட்டை ஏதோ ஒரு விண்கலமா நினைச்சு ஏறிடுவாங்களாம்.. அதுலேயும் இந்த சீனுக்காக படம் அவார்டு வாங்கப் போவுதாம்..”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ? “
“அந்தம்மா கிட்ட டைரக்டர் பேசிக்கிட்டிருந்த போது ஓரமாய் நின்னு ஒட்டு கேட்டேன்.. ” என்றுவிட்டு காலரை தூக்கி விட்டுக் கொண்டார்.
“உங்களுக்கு தெரியுமா  … இந்த வருஷம் ஆஸ்கார் வாங்கின ‘பியூட்டிபுல் மைண்ட்’ அப்படீங்கற படத்துல வர்ற மாதிரி இருக்கு இது ..”
“அப்படியா சார் ?”
“ஆமாங்க, தெறமசாலிங்க உங்க டைரக்டர்.. நல்லா உல்டா பண்றார் .. சரி நான் இப்பவாவது பேட்டி கிடைக்குதான்னு பாக்குறேன்”

பவ்யமாய் அவர் அருகில் சென்றேன். “சார்..” ஏதோ பேசிக்கொண்டிருந்தவர்  திரும்பி “என்ன ” என்றார்.
“நான் தான் மாமு..”
“ஆமா அது என்னங்க மாமு ? உங்க சொந்த பெயர் கிடையாதா ? ஹியர் தட் மெடம் .. ஹிஸ் நேம் இஸ் மாமு .. இஸ் இன்ட் இட் காமிக்கல் ? ” என்றுவிட்டு கபகபவென சிரித்தார். எரிச்சலாய் வந்தது. அடக்கிக் கொண்டு “மை நேம் இஸ் ஆனந்த் சார் ” என்றேன்.
“ஒ, ஒக்கே மிஸ்டர் ஆனந்த், நான் என்ன செய்யணும் ? “
“ஒரு பேட்டி சார்..”
“பேட்டியா ? என்ன பத்திரிகைன்னு சொன்னீங்க ?”
“விடிவெள்ளி சார்..”
“நான் கேள்வியே பட்டதில்லயே.. “
“இங்க டீ. நகர்ல தான் சார் பப்லிஷ் பண்றோம்..”
“நீங்க பண்றீங்க ஆனா யாரு படிக்கிறாங்க ..” என்றுவிட்டு கபகபவென சிரித்தார். அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன். அருகே இருந்த கேமராவை தலையில் போடலாம் போல இருந்தது. ஜோக் சொல்றானாம்.சிரித்து முடித்து விட்டு அவரே “குட் ஜோக்” என்றுவிட்டு
“ஸோ உங்களுக்கு பேட்டி வேணுமா ? குடுத்திட்டா போச்சு … நீங்க ஒண்ணு பண்ணுங்க நாளைக்கு இதே டைமுக்கு இங்க வந்திருங்க.. அப்ப வச்சிக்கலாம்.. என்ன “
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, புல்லட் வந்து “வந்துடுவார் சார்” என்றபடி என்னை தள்ளிக்கொண்டு வந்தார்.

“என்ன சார்  இது .. உங்களுக்கே தெரியும் நான் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிகிட்டிருக்கேன்.. “
“என்ன செய்ய மாமு .. இதெல்லாம் இப்படித்தான். நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க .. அப்ப பாப்போம்”
“நாளைக்கு மட்டும் கன்பர்ம்டா ?”
“அதெல்லாம் சொல்ல முடியாது.. நாளைக்கு வாங்கன்னா வாங்க .. ஓ.கே ? எனக்கு இப்ப நின்றைய வேலை இருக்கு..” என்றுவிட்டு சென்றார்.
“மத்தியானத்துக்குள்ள குழந்தைக்கு வேண்டியத வாங்கிட்டு வந்திருங்க.. இருக்கிறது தீர்ந்து ரெண்டு நாள் ஆகுது.. ரெண்டு நாளா சொல்லிகிட்டிருக்கேன்.. என்ன “
ப்ரியா சொன்னது ஞாபகத்துக்கு வர, கடிகாரத்தை பார்த்தான். மணி ஐந்து என்றது.
எரிச்சலில் எதையாவது எட்டி உதைக்கவேண்டும் போல இருந்தது. வாசலில் ‘ரோஜாத்தோட்டம்’ என்று போர்ட் வைத்திருந்தார்கள்.
சிரிப்பு தான் வந்தது.

*****

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்