ஆதாம் வாழ்கிறான்

ஆகஸ்ட் 29, 2008 at 10:30 பிற்பகல் (ஆதாம் வாழ்கிறான்)

 

பேரூந்தின் நெரிசலில் உரசும்
கால்களிலும் தோள்களிலும்,
நடக்க இடமில்லா
நடைபாதைகளில்
உடை இடை
பாதிகளில்
விளையாடும் கைகளிலும்,
கண்களால் செய்யும்
கற்பழிப்பு
செயல்களிலும்
ஆதாம்
இன்னும்
வாழ்கிறான்.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

மதமாற்றம்

செப்டம்பர் 2, 2006 at 1:11 மு.பகல் (மதமாற்றம்)

எங்கள் ஊர்
மசூதியில்,
சில சில்லறைகளுக்காய்
பல பிச்சைகாரர்கள்
வெள்ளிக்கிழமைகளில்
மதம் மாறுகின்றனர்.

0o0o0o

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

புதைகுழிகள்

ஆகஸ்ட் 31, 2006 at 5:29 பிற்பகல் (புதைகுழிகள்)

 

விடியாத இரவுகள்,
வெளிச்சப்புள்ளிக்கப்பால் வெறுமைகள்,
நீரின்மேல் நுசூற்று வரையும் நிசப்த வளையங்கள்,
மலைகள் வேலியாய் நீண்ட வயல் வெளிகளின்
நடுவே சிக்கிய ஒற்றை மரத்தின் தனிமை.
மனித கூட்டத்தின் மத்தியில் இருந்தும்
இவை சில மறக்காத நினைவுகள்.
சக்கரத்தின் ஒரு கம்பியாய் நானும் சுற்ற,
இனம் புரியா இருட்டு கைகொட்டி சிரிக்கும்.
உள்செல்வது உணரவே வெகுநேரம் பிடிக்க
புதைந்து கொண்டு இருக்கிறோம்.
கண்ணை மூடினால் பிரகாசமாய் தெரியும் கருப்பு புதைகுழிகள்.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

மோகமுள்

ஆகஸ்ட் 31, 2006 at 1:17 பிற்பகல் (மோகமுள்)

தேன் வற்றிய தேன்கூடாய்
பிசுபிசுக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு.
விரலுக்கேற்ற மோதிரங்கள்
தொலைந்து போய்
மோதிரத்திற்காய்
விரல் வீக்கங்கள் !
தொட்டால் பூ மலருமோ என்னவோ
தொடாமல்
மரமாய் வளர்ந்து நிற்கிறது
என் மோகம்.
புறங்கை எச்சிலாய் நேற்றைய மிச்சங்கள்.
பசிக்காய் கேட்கிறேன்
ருசிக்கான சிந்தனைகளை சற்று
ஒத்திவை.

0o0o0o

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

ரோஜா

ஆகஸ்ட் 31, 2006 at 1:08 பிற்பகல் (ரோஜா)

 

காதல் அச்சாரங்களாம் இந்த
காம்பில் தவம் செய்யும் ரோஜாக்கள்,
முட்களின் பாதுகாப்பில்
சிறையிருக்கும் ராணிகள்.

பருவம் அடைந்ததும்
பறிக்கப் பெறும் அப்பாவிகள்
பேதையில் துவங்கி பேரிளம்பெண் மட்டும்,
கொண்டை  பூட்டில்
சொருகப் பெறும் சாவிகள்.

கல்யாணப் மாலைகளில்
மணம் வீசும் மெல்லினங்கள்,
எரிந்து போகும் சவங்களுக்காய்
இறந்து போகும் உடன்கட்டைகள்.

நிரந்தர பந்தம் 3 மறுமொழிகள்

நீ

ஆகஸ்ட் 31, 2006 at 12:53 பிற்பகல் (நீ)

சில நேரங்களில்
கருப்பு வெள்ளை படங்களின்
கவர்ச்சி
கலர் படங்களில் இருப்பதில்லை
உதிரும் சருகின்
அமைதி
உருவாகும் பச்சையத்தில்
நிலைப்பதில்லை
தண்ணீர் தரும் திருப்தி
வேறு எதுவும்
தந்ததில்லை
பேசுவதற்காய் வார்த்தைகள்
இருந்தும்
என்னிடம் இருக்கும் இந்த
மௌனத்தை போல..

0o0o0o

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

இலையுதிர் காலங்கள்

ஆகஸ்ட் 31, 2006 at 4:08 மு.பகல் (இலையுதிர் காலங்கள்)

 

 விளக்குக் கம்பத்தைச் சுற்றும்
விட்டில் பூச்சிகளாய்
மனதின் உள்ளே
ஆயிரம் நெருடல்கள்.

படித்த வாக்கியங்களின்
அர்த்தங்கள் மறைந்து போய்
உதடுகளுக்கு தண்டனையாய்
உச்சரிப்புக்கள் மட்டும்.

இருந்த போது தொடாது நின்று
காணாமல் போனபின்
கனவில் வந்து உறுத்தும்
செல்ல நாய்குட்டியான சிந்தனைகள்.

அலை
அடிக்கும் போது
விலகி நின்று
திரும்பப் போகையில்
நனைவதற்காய் துரத்தி போகும் சிந்தனைகள்.

மடியில் விழுந்த பூவை காயவிட்டு
கிளையில் இருப்பதை
கிள்ளி பார்க்க முயலும்
‘இந்த பழம் புளிக்கும்’ சிந்தனைகள்.

நித்தம் நித்தம்
நினைவுகளில் மூழ்கி
முத்துக்களை எதிர்பார்த்து
சிப்பிகளை மட்டுமே  சேகரிக்கும் சிந்தனைகள்.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

தேடல்

ஆகஸ்ட் 26, 2006 at 3:18 பிற்பகல் (தேடல்)

 

 இருண்டு கிடக்கும்
பனிப் பிரதேசங்கள்,
சருகுகள் சரசரக்கும்
நெடுமரங்கள் இடை பாதை,
புவியீர்ப்பு விசை
பொய்த்துப் போகும் உயரங்கள்,
குளிர் போர்வையால் தழுவும்
ஆழ்கடல் பிரதேசங்கள்,
வெய்யிலின் வெம்மையில்
வாய் பிளந்த வறண்ட பூமி
என
கல்லூரி காலங்கள்,
வீணில் பொழுதுகள்,
கோடை காலங்கள்,
குளிர் காலங்கள்,
இதுபோல் இன்னும்
பற்பல காலங்களில்,
பற்பல நேரங்களில்,
தேடி தேடி,
உணர்வுகள் உலர்ந்து,
நினைவுகள் கடந்து,
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான உன்னை.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

உறவுக்காலம்

ஆகஸ்ட் 26, 2006 at 3:06 பிற்பகல் (உறவுக்காலம்)

 

என் மனக்குளத்தின் மத்தியில்
கல் எறிந்து
நீரலைகள் நிற்கும் முன்
காணாமல் போனவளே !

பார்வை நிலைகொளல்களும்
வார்த்தை பரிமாற்றங்களுமாய்
மேகக்கூட்டத்தின் மத்தியில்,
வானவில்லின் வண்ணம் கொண்டு
எழுதப்பட்டதொரு ஒப்பந்தம்,
நூலறுந்த காற்றாடியாய்
இன்று தெருவோரம் கிடக்குதடி !

எதிர்பார்ப்புகள் என் உத்திரத்தில்
கட்டப்படும் சிலந்தி வலைகள்.
ஏமாற்றங்கள்
என் வீட்டு முன் அறையை
அலங்கரிக்கும் தோரணங்கள்.

சிந்தனைகளை
சிந்தனைகள் கொய்து செல்ல
மிச்சமாய் கிடக்கும்
பச்சையமற்ற பிரதேசங்களில்
சருகாகிக் கிடக்கும் உன் நினைவுகள்.

துவக்கத்துக்காய் நான் எழுதிய
கவிதை
முடிவுரையாய்
முகமற்றுப் போனது எப்படி ?

என் நிழலைத் தின்றது
இரவோ இல்லையோ,
தக்க வைத்துக் கொள்ளாதது
என் தவறு தான்.
விலகலுக்குப் பின் தான்
விளங்குகிறது.
வெட்டினால் வளர்வது
நகம் தான்,
அகம் அல்ல.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்