விடியலின் வெளிச்சம்
முன் குறிப்பு:
ஆனந்த விகடன் நடத்திய ”படத்திற்கு கதை எழுதவும்” போட்டிக்கு எழுதிய கதை. படம் கிட்டத்ட்ட கீழே உள்ளது போல இருந்தது.

தெருவிளக்கின் மங்கலான ஒளியில், நிழல் பின்னோடு ஓடிவர, ஓட்டமும் நடையுமாய் வந்தாள் கல்பனா. சைதாப்பேட்டையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிசைப்பகுதிகளில் இருந்து வீசும் நறுமணமான துர்நாற்றம் அவளை சிறிதும் பாதித்ததாக தெரியவில்லை. முகத்தில் வியர்வைத்துளிகள் மெதுவாய் கீழ் நோக்கி வழியத்துவங்கின. சேலை தலைப்பில் அதனை துடைத்தபடி நடையை வேகப்படுத்தினாள். உடுத்தியிருந்த காட்டன் புடவை, வியர்வை ஈரத்தை உறிஞ்சி உடலோடு ஒட்டிக்கொண்டது. பஜார் தெருவினை வந்தடைந்தவளின் பார்வை, இருபுறமும் இருந்த நடைபாதைகளை துழாவியது. ஒரு ஓரத்தில் நாய் ஒன்று படுத்திருக்க, மற்ற நடைபாதை பாதி உடைந்து, மீதியில் குப்பை சுமந்து இருந்தது. தூரத்தில் இருந்த பெட்டிக் கடையில் வெளிச்சம் தெரிய, மறுபடியும் ஓட்டமும் நடையுமாய் தொடர்ந்து கடையை அடைந்தாள்.
“அடடே ! வாம்மா கல்பனா .. என்னம்மா எதாவது வேணுமா ? சீக்கிரம் சொல்லு கடைய மூடணும் ..”
“இல்லங்க .. நான் அவரை தேடி இங்க வந்தேன்.. “
“யாரு பாண்டியனா ? ” புருவம் சுருக்கி யோசித்தவர் ” மத்தியானம் பார்த்தேன்னு நினைக்கிறேன்.. ஏம்மா இன்னும் வீட்டுக்கு வரலை ? “
“இல்லங்க .. அதுக்கப்புறம் நீங்க பாக்கலையா ? “
“இல்லம்மா.. நீ வேணும்னா மார்கெட்டுக்கு அந்தப்பக்கம் போய் பாரு .. ஒருவேளை அங்க இருக்கலாம்..”
“சரிங்க .. ” என்றபடி தொடர்ந்தாள்.
“ஏய் உன்னத்தான் .. என்ன பண்ற அங்க ? “
“இதோ வந்துட்டேன்.. “ சோற்று பாத்திரத்தை களைந்தபடி வந்தாள் கல்பனா.
“என்ன வேணும் ?”
“எனக்கு ஒரு அம்பது ரூபா வேணும் ..”
“எதுக்கு இப்போ அவ்வளவு காசு ? “
“கேள்வி எல்லாம் கேக்காத .. குடுன்னா குடு ..”
“ராத்திரிக்கு ஊத்திக்க தானே .. மாட்டேன்.. இத வேற செலவுக்கு … “
“என்னடி பெரிய செலவு.. நான் சம்பாரிச்சு கொண்டாரும் போது உன்னாண்ட இந்த மாதிரி கையேந்திட்டா இருந்தேன்..ராஜா மாதிரி இருந்தேண்டி.. பாழாப்போன லாரி என் கால்ல ஏரலைன்னா இன்னிக்கு உன்னாண்ட கையேந்த வேணாம்.. எல்லாம் என் நேரண்டி..”
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு சத்தம் போடற ? அம்பது ரூபா நெஜம்மா வேற செலவுக்கு வேணும்யா .. “
“அப்டியா ? அப்டி என்ன செலவு மகராணிக்கு ? தெனம் நீ வேலைக்கு போவற்துக்கு முன்னால சீவி சிங்காரிக்கற்து நான் பாக்கலைன்னு நெனைக்கிறியா ? புருஷன் கால் அவுட்.. இனிமே ப்ரயோசனப்பட மாட்டான்னு நெனச்சிட்டியா ? ” என்றவன், அவள் அனல் பார்வை அவன் மேல் திரும்ப, வேறு திசையில் வெறிக்கத் துவங்கினான். அவள் இன்னும் அவனை வெறிப்பதை நிறுத்தவில்லை. உணர்ந்தவனாய், “இப்போ கடைசியா இன்னா சொல்ற ? முடியுமா முடியாதா ? ..” என்றவனுக்கு பதில் ஏதும் வராமல் போக திரும்பிப் பார்த்தான்.
கல்பனா அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு, அடுப்பை மூட்டிக்கொண்டிருந்தாள்.
“ஏய் என்னாடி நான் கேட்டுகினே இருக்கேன் .. நீ பாட்டுக்கு உன் வேலைய பாத்துனுக்கிற ? முடியுமா , முடியாதா ? “
“முடியாது” தெளிவாய் பதில வந்தது.
கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து வீசி எறிந்தான். பின் கைகளால் வேகமாய் உந்தித்தள்ளி சக்கரம் வைத்த பலகையின் உதவியோடு வீட்டைவிட்டு வெளியே வந்தான். எதிர்குடிசையில் லோகு இவனை பார்த்ததும் மெதுவாய் எழுந்து வந்தான்.
“என்னப்பா ! ஊட்ல சண்டையா .. சத்தம் கேட்டிச்சி ? “
“என்னிக்கி கேக்கல ? ” என்றவன் “ஒரு பீடி இருந்தா குடேன் .. “
கொஞ்சம் யோசித்து, கட்டிலிருந்து ஒரு பீடியை உருவினான் லோகு. “இந்தா.. “ அவனே பற்றவும் வைக்க, மெதுவாய் புகையை உறிஞ்சி ஆகாயம் நோக்கியபடி புகையை வெளியே விட்டான் பாண்டியன்.
“என்னப்பா , என்ன சொல்து கல்பனா ? ” என்றுவிட்டு உள்ளே பார்த்தான்.
ஏதும் பேச விரும்பாதவனாய் முகம் திருப்பிக்கொள்ள ” நான் கேட்டுந்தான் இருந்தேன். அது சொல்றதும் நியாயந்தானே ? என்ன நா சொல்றது ? “
பாண்டியனுக்கு எரிச்சலாய் வர, “லோகு .. நீ இதெல்லாம் கொஞ்சம் கண்டுக்காம இரேன்..”
“சரி பா.. உனக்கு புடிக்கலைன்னா வாணாம்.. “
கல்பனா வெளியே வர ” என்ன கல்பனா .. நல்லா கீறியா ? ” என்றபடி பான் பராக் கரை தெரிய சிரித்தான் லோகு.
“அங்கயே கேளு.. நல்லா இருக்கனா இல்லையான்னு.. ” என்றபடி நடந்தாள்.
அவள் தெருக்கோடியில் மறையும் வரை பார்த்திருந்தவன், “பாத்தியா லோகு.. வேலை செஞ்சி ஊட்டையும் புருஷனையும் காப்பாத்தராளாம்.. அந்த மெதப்பு.. ரெண்டு மாசத்துக்கு முன்னால எங்க போச்சி இந்த மெதப்பு ? அப்ப நான் துட்டு கொண்டார சொல வாங்கி சொருவிக்க தெரிஞ்சிச்சு. .இப்ப காலு போனதும் நானும் செல்லாக்காசா பூட்டேன்.. இது தான் நேரன்றது.. ” என்றபடி நொந்தவனை பார்த்து ” உடுபா .. ” என்றான் லோகு.
“அக்கா உன் புருஷனுக்கு அடிப்பட்டு நாலு மாசம் ஆவாது இத்தோட ? “
“ம்ம்.. ” என்றாள் கல்பனா.
“ஆமா அது என்ன செய்து இப்போ ? “
“ஊட்ல தான் இருக்கு.. “
“அப்ப உன் சம்பாத்தியத்த வச்சி தான் பொழப்பு நடக்குதா ? “
“ம்ம்..”
“உக்காந்தபடி ஏதாவது செய்ய சொல்ல வேண்டியது தானே ? “
“அதான் ஏற்கனவே செய்யுதே.. உக்காந்தபடி நல்லா தண்ணி போடற்து.. உக்காந்த வாக்குல சாப்பாடு.. உக்காந்த வாக்குல பீடி .. “
அப்போது தான் கல்பனா சைடில் நின்று கொண்டு தன்னையே வெறித்துக்கொண்டிருந்த மேஸ்திரியை பார்த்தாள். அதை பார்த்த மேஸ்திரி,
“அங்க என்னம்மா கதை அளக்கறீங்க .. வேலைய பாருங்க” என்றபடி கிட்ட வந்தார்.
“திலகம் .. ரெண்டாவது மாடில கூட மாட ஒத்தாச செய்ய ஒரு ஆள் கொறையுது .. போ” என்று விரட்டாத குறையாய் சொன்னார். அவள் போகும் வரை காத்திருந்துவிட்டு ” என்ன கல்பனா , உன் புருஷனுக்கு எப்படி இருக்கு ? ” என்று விட்டு தேவையில்லாமல் சிரித்தார்.
கல்பனாவுக்கு அவரை பார்க்க எரிச்சலாய் வந்தது. “புருஷனுக்கு ஒடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சி கேக்கும் போது எதுக்கு சிரிக்கணும் “ என்று நினைத்தவள் .. “இப்ப பரவால்ல .. ” என்றாள்.
“வருமானம் எல்லாம் நீ தான் பாத்துக்கிறியாமே ? “
“ம்ம் ” என்றபடி சிமெண்ட் மணல் கலவையை மிதித்தாள்.
“இந்த ஒரு வருமானத்த வச்சு எப்படி சமாளிக்கற ? கட்டுப்படியாவுதா ? “
“ம்ம்.. “
அவள் ஏதும் பிடி கொடுக்காமல் பேச, அவர் முகத்தில் சிறிது ஏமாற்றம். பின்னர் ஏதோ நினைத்தவராய் “உனக்கு ஏதாச்சும் பணம் கிணம் வேணும்னா சொல்லு கல்பனா .. வேத்து மனுஷனா நினைக்காதே என்ன … ” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்.
கல்பனாவுக்கு தன் நிலையை நினைக்க எரிச்சலாய் வந்தது. வீட்டில் எப்போதும் அடைந்து கிடக்கும் புருஷன். வெளியே புருஷனாகத் துடிக்கும் இப்படியும் சிலர். யோசித்தபடி நின்றவளை திலகம் வந்து உலுக்கினாள்.
“என்னக்கா நின்னபடி தூங்கற ? “
“ஒண்ணும் இல்ல திலகா.. “
“வழக்கம் போல நம்ம மேஸ்திரி தன் வேலைல எறங்கிட்டாரா ? ” என்று கண்ணடித்தவளை “போடி பைத்தியம் .. நிலமை தெரியாம நீ வேற .. ” என்றாள்.
“நான் சும்மா தான் கேக்கறேன் .. நீ எத்தினி நாளைக்கு தான் இப்படி கஷ்டப்படுவ ? உன் புருஷனை ஏதாச்சும் வேலைக்கு போவச் சொல்லுக்கா. “
“அந்தாள் நிலமை உனக்கு தெரியாததில்ல.. இந்த நிலமைல யார் திலகா வேலை குடுப்பா ? “
“போக்கா நீ வேற .. கால் இல்லாத , கண் இல்லாத எத்தன பேரை நம்ம ரயில்வே ஸ்டேஷன்ல போன் பூத்துலையும், சின்ன சின்ன சாமான் விக்குற இடத்துலேயும் பாக்கல.. எல்லாம் முயற்சி செஞ்சா முடியும் .. நீ தான் சொல்ற விதத்துல எடுத்து சொல்லணும் .”
“என்னத்த எடுத்து சொல்றது.. உனக்கு தெரியாது இந்த மாதிரி நான் முன்னால ஒரு வாட்டி பேசி, வாங்கி கட்டிகிட்டது. நம்ம இங்க நாய் பாடு பட்டு அம்பதோ நூறோ சம்பாரிச்சு கொண்டு போவ, அங்க அந்தாளு குடிச்சுட்டு உழுந்து கிடப்பான்.. உக்காந்த நிலையிலேயே எல்லாத்தையும் நான் செய்யணும் , பின்ன வேலைக்கும் வரணும்.. முன்னல்லாம் ஏதோ வேலைக்கு போவுச்சி அதுனால கொஞ்சம் சுளுவா காசு பாக்க முடிஞ்சுச்சி. இப்ப நான் ஒருத்தி தான்.. ஒண்ணும் இல்லை திலகம், வேற ஏதும் வேணாம். இம்புட்டு செய்யறேனேன்னு கொஞ்சம் பரிவு இருக்குதா .. ? ” என்றுவிட்டு வானத்தை பார்த்தாள். விழிகளின் விளிம்பில் நீர் தேக்கம் கொள்ள ஆரம்பித்தது. சுதாரித்து
“என்ன தான் ஆனாலும் என்னிக்காவது எனக்கு விடியும் .. அந்தாளுக்கு ஒறைக்கும்.. அப்படீன்னு ஒரு நம்பிக்கை .. ஓடுற வரைக்கும் ஓடட்டும்.. மத்தது நம்ம கையில இல்ல ” என்றபடி சிமெண்ட் மணல் கலவையை மிதிக்கும் அவளை பரிதாபத்துடன் பார்த்தாள் திலகம்.
“மணி என்னங்க ” என்று எதிரில வந்த ஒருவரிடம் கேட்டாள் கல்பனா.
“ஏழாவுதும்மா .. “
“சரிங்க ” என்று விட்டு நடையை வேகப்படுத்தினாள். அவளுடன் ஈடுகொடுக்க முடியாத திலகா ” என்னக்க அவசரம் “
“மிபுச் தீயசூவபூசூஷ.. இப்ப நான் போயி அந்தாளை சண்டை போட்டாவது புடிச்சி வச்சா தான் குடிக்கப் போகாம தடுக்கலாம்.. அதான்..”
“ஏன்கா.. காலையில தானே இதப்பத்தி நம்ம பேசிகிட்டிருந்தோம்.. அதுவா நினைக்கற வரைக்கும் உன்னால ஏதும் செய்ய முடியாதுக்கா.. “
“போடி பைத்தியம்.. அதுக்காக நம்ம முயற்சி செய்யாம இருந்தா மட்டும் எல்லாம் மாறிடுமா ? ஏதோ முயற்சி செஞ்சி பாக்குறது.. என்னிக்காவது ஒரு நாள் விடியாதா” என்றபடி போகிறவளை வியப்புடன் பார்த்தாள் திலகம்.
“உன்ன நினைச்சா எனக்கு ஆச்சர்யமா இருக்குக்கா.. சரி நான் வரேன்” என்று இடைப்பட்ட சந்தில் வெளிப்பட்டாள்.
கல்பனாவுக்கு அவள் திலகத்திடம் சொன்னதை நினைக்க உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. “என்ன நம்பிக்கை ! எட்டு வருஷமா குடும்பம் நடத்துறதுல இது ஒண்ணு தான் மிச்சம் இருக்கு.. சொல்லப் போனா இந்த எட்டும் வருஷமும் இந்த நம்பிக்கைல தான் ஓடிச்சுன்னு சொல்லணும்.. “
ஏதேதோ நினைத்தபடி நடந்தவளை திலகத்தின் குரல் கலைத்தது.
“அக்கா.. நில்லு ” என்றபடி மூச்சிரைக்க ஓடிவந்தாள்.
“என்னடி என்ன விஷயம் ? “
கொஞ்சம் மூச்சு வாங்கி பின் ” உன் புருஷனை பஜார்ல அடிச்சிட்டாங்களாம்.. “
செய்தியை கேட்டதும் கல்பனாவுக்கு அதிர்ச்சிக்கு பதில் எரிச்சலும் , ஆத்திரமுமே வந்தது. சமாளித்து “எங்கடி .. என்ன ஆச்சு ” என்றாள்.
“நம்ம மூர்த்தி சார் சொன்னார்கா.. அவர் அந்த வழியா வர்றப்போ பாத்திருக்கார்.. என்ன பாத்ததும் விஷயத்த சொன்னார்.. அது வந்து… ” என்று தயங்கும் அவளை ” என்னடி மென்னு முழுங்குற .. முழுசா சொல்லு .. ” என்றாள்.
“வந்து உன் புருஷன், நம்ம மருது இல்ல .. அதான்கா உன் புருஷன் மாதிரியே கால் இல்லாம இருக்குமே .. படமெல்லாம் வரையுமே.. அது வரைஞ்சு வச்சிருந்த படத்து மேல போட்டிருந்த காச உன் புருஷன் எடுக்க, தகராறாகி .. ” என்று தயங்கி ” உன் புருஷனை மருதுவும் அது கூட ஒண்ணு இருக்குதே அதுவும் சேர்ந்து அடிச்சிருச்சாம்.. இத பாத்த நம்ம மூர்த்தி சார் பயந்து போயி இத என் கிட்ட சொல்லி உன்கிட்ட சொல்ல சொன்னார்.. ” என்றாள்.
கல்பனா பஜாரின் மறுமுனைக்கு வந்திருந்தாள்.
நடைபாதையில் பாண்டியன் விழுந்து கிடப்பது தெரிந்தது. வேகமாய் அவனை நோக்கி ஓடினாள்.”இப்படி நினைவு போற மாதிரியா அடிச்சாங்க ” அவள் வயிற்றில் ஏதோ செய்தது. தரையில் ராமர் படம் இருக்க, அவன் முகத்தை நாய் ஒன்று முகர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, ஓடிச்சென்று அதை விரட்டினாள். மெதுவாய் அவனை எழுப்பினாள். முகத்தை அருகில் கொண்டு வந்ததும் குப்பென்று சாராய வாடை அடிக்க, அவன் முகத்தை உலுக்கினாள். அவன் மெதுவாய் கண்ணைத் திறந்தான். பின்னர் குழறியபடி “கல்பனா.. அந்த மருது பய வரட்டும் அவன ரெண்டுல ஒண்ணு பாக்காம நான் இங்கருந்து வர மாட்டேன்.. ” என்றபடி தடுமாறினான். எதிரே வந்த சைக்கிள் ரிக்ஷாவை நிறுத்தினாள். ரிக்ஷாக்காரரின் உதவியோடு அவனை அதில் ஏற்றி தானும் ஏறிக்கொண்டாள். அவள் தோளில் சாய்ந்தபடி அவன் “அவன பாத்துட்றேன்.. ” என்று முனகினான்.
“என்னிக்காவது எனக்கு விடியும் .. ” காலையில் அவள் சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்திற்கு வந்தது. கண்களில் நீர் தேங்கத் துவங்க வெட்டவெளியை வெறித்தபடி புன்னகைத்தாள்.
ரோஜாத்தோட்டம்
முன் குறிப்பு:
ஆனந்த விகடன் நடத்திய ”படத்திற்கு கதை எழுதவும்” போட்டிக்கு எழுதிய கதை. படம் கிட்டத்ட்ட கீழே உள்ளது போல இருந்தது.
![]()
விஜயவாஹினி ஸ்டுடியோவின் உள்ளே அந்த பெரிய க்ரவுண்ட்டில் ஒரு பார்க் செட்டிங் அமைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. புல்லட்பூபதி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஏன்பா அந்த மொல்டட் ஸ்டெப்ஸை எடுத்துக்கிட்டு வந்து இந்த இடத்துல வைங்க.. அப்புறம் ராஜா நீ அந்த ரெண்டு பெஞ்சையும் கொண்டு வந்து, ஒண்ணு இந்த் சைட், மத்தது அந்த பக்கமாவும் போடச் சொல்லு”
“ஓ.கே சார் ..”
செட்டின் ஒரு மூலையில் நின்று கொண்டு அதன் பர்ஸ்பக்டிவ் (Perspective View) பார்த்தார். திருப்தி அடைந்துவிட்டார் போலும், மெதுவாய் தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து, சிகரெட் ஒன்றை வாயில் வைத்தபடி, மூலையில் போடப் பட்டிருந்த சேரில் உட்கார்ந்தார். நான் உடனே அவர் அஸிஸ்டன்டிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் சென்றேன். லைட்டரை தேடிக்கொண்டிருக்க ஓடிச்சென்று பற்ற வைக்க நெருப்பு காட்டினேன். நிமிர்ந்து பார்த்தார்.
“அட வாங்க மாமு ! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் ?”
“ஒய்ப்க்கு டெலிவரி .. ரெண்டு மாசமா அது சம்பந்தமாவே அலைய வேண்டியதாய் போச்சு.. அதான்..”
“நான் கூட நினைச்சேன் சில சமயம்.. என்னடா மனுசன் பட பூஜையிலேர்ந்தே ஆஜர் ஆயிடுவாரே .. என்ன காணோம்ன்னு .. அப்புறம் .. ச்சீ .. பாருங்க நீங்க விஷயத்த சொல்லியும் எனக்கு உறைக்கவேயில்ல … கங்கிராஜுலேஷன்ஸ்.. பாய் ஆர் கேர்ள் ? “
“பையன் தான் சார்.. “
“டெலிவரி நார்மல் தானே ..?”
“ஆமாம் சார்..”
“குட்.. அப்புறம் ?”
“உங்களுக்கே தெரியும் .. நம்ம டைரக்டர் கிட்ட ஒரு இன்டர்வியூ வேணும் … ரொம்ப நாளா டிரை பண்ணிகிட்டிருக்கேன்.. ஆனா முடியலை.. உங்ககிட்ட கூட சொன்னேனே .. போன தடவை பார்த்த போது.. அப்ப தானே சொன்னீங்க .. அடுத்து நீங்க பண்ற படத்துக்கு அவர் தான் டைரக்டர்ன்னு …”
“சொன்னேனா ? இருக்கும் .. எனக்கு இருக்கிற டைட் ஸ்கெட்யூல்ல இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்குது.. எனிவே.. இன்னிக்கு டிரை பண்றேன் .. ஆனா கன்பர்ம்டா சொல்ல முடியாது..”
“நீங்க மனசு வச்சா முடியாதா … கொஞ்சம் முயற்சி பண்ணுங்க சார்..”
“இல்ல மாமு .. உங்களுக்கே தெரியும்.. ஆள் இன்டஸ்டிரில பெரிய மனுஷன்.. வழக்கமா ஆனந்த விகடனுக்கே யோசிச்சி தான் பேட்டி குடுப்பார்..உங்க பத்திரிக்கை வேற ரொம்ப சின்னது..சரி விடுங்க .. நீங்க நமக்கு தெரிஞ்சவர் .. அதுனால மட்டும் தான் நான் டிரை பண்றேன்..”
அதான் படிச்சிருக்கேனே அந்த பேட்டியை எல்லாம்.. ஏதோ இவனுக்கு மட்டும் தான் உலகத்துல படம் எடுக்க தெரிஞ்சா மாதிரி. எல்லாம் என் நேரம் என்று நினைத்தேன்.
“என்ன மாமு, பதிலையே காணோம் ?”
“ஒண்ணும் இல்லங்க .. என்ன என்ன கேள்வி கேக்கறதுன்னு மனசுக்குள்ள அசை போட்டுகிட்டிருந்தேன்..”
“ஒண்ணு பண்ணுங்க அங்க கட்டி வச்சிருக்காங்க பாருங்க எருமை மாடு அது பக்கத்துல போய் நின்னுகிட்டீங்கன்னா ரெண்டு பேரும் சேர்ந்து அசை போடலாம்..” என்றுவிட்டு ஊருக்கே கேட்கும் படி பான் பராக் கரை பற்கள் தெரிய சிரித்தார். “சும்மா ஜோக்குக்கு சொன்னேன் .. கோவிச்சுகிட்டீங்களா ?” என்று மறுபடி சிரித்தார்.
“இல்ல சார் ..” என்று லேசாக ஒரு புன்னகையை உதிர்த்தேன். மனசுல பெரிய காமெடி கிங்ன்னு நினைப்பு .. ஏன்யா உங்க வீட்ல எல்லாம் கண்ணாடியே இல்லயா ..? என்ன சொல்லிட்டன்னு இப்படி சிரிக்கிற ? மனதில் பல கேள்விகள் எழுந்தாலும் , புன்னகை மாறாமல் நிற்கும் என்னை நினைக்க எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வருடம் முன்னால் வரை முத்தாரத்தில் ரிப்போர்டராக இருந்தவன். ஒரு வருடம் முன்னால் நண்பர்கள் சிலரின் கட்டாயத்தில் அவர்கள் துவங்கிய ஒரு வார இதழில் பார்ட்னராக சேர்ந்தேன். அப்போது பிடித்தது சனி என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து எல்லா விஷயங்களுக்கும் அலைச்சல் தான். எளிதாக நடந்தாக சரித்திரம் இல்லை.. இப்போது அதன் தொடர்ச்சியாய் ‘இந்த ‘மாக்கான்’ டைரக்டரின் பேட்டியை எப்படியாவது நீ தான் எடுத்து வர வேண்டும், நீ தான் சினி இன்டஸ்டிரியில் நிறைய கான்டாக்ட்ஸ் வைத்திருப்பவன் ‘ என்றெல்லாம் பேசி ஒரு வழியாய் இதை என் தலையில் கட்டிவிட்டான் என் நண்பன்.
இதற்குள் அவர் சிரித்து முடித்திருந்தார்.
“சரிங்க மாமு, நீங்க செட்டுக்கு வெளிய, அங்க ஒக்காந்திருங்க .. நான் போய் பாத்துட்டு வரேன்..” என்றுவிட்டு பான் பராக் நிரம்பிய எச்சிலை அருகில் துப்பினார். பார்க் செட்டிற்கு ஒரு நேட்டிவிட்டி குடுக்கிறார் போலும். பொது இடங்கள்ள பான் பராக் போடக் கூடாதுன்னு சொன்னா மட்டும் இவன்களெல்லாம் திருந்தவா போறாங்க. கேட்டா இது பொது இடம் இல்லன்னு சொல்லுவாங்க .. எனக்கே என்னை நினைக்க சிரிப்பாய் வந்தது. நான் எப்போது இவ்வளவு பொது சிந்தனை கொண்டவனானேன் ? எதற்கு இந்த தேவையில்லாத ஆராய்ச்சி, வேலையை பார்ப்போம் என்று நினைத்து செட்டின் ஓரத்தில் போடப்பட்டிருந்த மேடையில் உட்கார்ந்தேன்.
புல்லட்டின் உதவியாளர், மேலும் என் நண்பர் ராஜா என்னை பார்த்து கை அசைத்து மெதுவாய் அருகே வந்தார். ராஜா ஒருவர் மட்டும் நார்மலானவர் அந்த கும்பலில். என் நல்ல சிநேகிதர்.
“என்ன மாமு எப்படி இருக்கீங்க ? “
“ஏதோ உங்க புண்ணியத்துல சவுக்கியம்..”
“என் புண்ணியமா, நீங்க வேற நிலமை தெரியாம பேசாதீங்க .. அப்புறம் ஒய்ப் டெலிவரி எல்லாம் முடிஞ்சதா ? ஆணா, பொண்ணா ? “
“ஆண் தான் .. தாய் சேய் இருவரும் நலம்..”
“என்னங்க டி.வி ல தாய் சேய் நலம் பத்தி சொல்ற மாதிரி சொல்றீங்க ?”
“என்னங்க செய்ய , குழந்தை பிறந்தா சந்தோஷப்படணும், ஆனா செலவுகள் மேலே ஏறி பயமுறுத்துதே…”
“எல்லார்க்கும் அதே தான்.. விடுங்க.. ஆமா என்ன விஷயமா சாரை பாக்க வந்தீங்க ?”
“எல்லாம் ஒரு பேட்டி விஷயமா தான். படத்தோட டைரக்டர் தானே இன்னிக்கி லீடிங் ? அதான்..ரொம்ப நாளா டிரை பண்றேன் .. ஆள் சிக்க மாட்டேன்றார்.”
ராஜா கேட்டுக்கொண்டே ஒரு சிகரெட்டை வாயில் வைத்து என்னிடமும் ஒன்றை நீட்டினார்.
“நோ தாங்க்ஸ்..”
“அப்ப லைட்டர் வச்சிருக்கீங்க ?”
“அது மத்தவங்களுக்கு.. இந்த மாதிரி யாரையாவது சந்திக்க போனா அப்படியே அவங்களுக்கு சிகரெட் பத்த வச்சி அப்படியே பேட்டி கேக்க வசதி அதான்..”
“அய்.. அப்ப நாங்க மட்டும் சிகரெட் பிடிச்சு சாகணும், சுத்தம் அப்படி இப்படீன்னு பேசற நீங்க மட்டும் அதை தூண்டற மாதிரி லைட்டரோட அலைவீங்க ..என்னங்க நியாயம் ..” என்று சிரித்தார்.
சிரித்துக் கொண்டே கேட்டாலும் உள்ளுக்குள் ‘சுறுக்’ என்றது. இனிமேல் வேற எதாவது டெக்னிக் யூஸ் பண்ண வேண்டியது தான்.
“ஆமா ராஜா இன்னிக்கு என்ன சீன் ? என்ன சப்ஜெக்ட் இந்த படம் ?”
“யாருக்கு தெரியும் ? செட் போடறதோட நம்ம வேலை ஓவர் ..”
“அய் .. உங்களுக்கு தெரியாமலா சொல்லுங்க ..”
சுற்றி ஒருமுறை பார்த்தவர், குரலை தாழ்த்திக் கொண்டு “எதையும் வெளிய சொல்லக் கூடாதுன்னு கண்டிப்பான இன்ஸ்டிரக்ஷன்.. அதான்.. ஏதோ சயன்ஸ் சப்ஜெக்ட்ன்னு சொன்னாங்க .. இது வரைக்கும் எடுத்ததை பார்த்தா மாரியம்மன் படம் மாதிரி இருக்குது.. ஒண்ணும் புரியலை. வெளியே விட்டுடாதீங்க..ப்ளீஸ்”
“ஒ.கே ராஜா தாங்க்ஸ்.. ஆமா அது என்ன எருமை மாடு ஒண்ணு நிக்குது ? வழக்கம் போல ஹீரோ பால் காரனா ? “
“இல்லீங்க அது ஏதோ ஒரு சீன்ல வருதுன்னு மட்டும் தெரியும்.. ஆனா எதுக்குன்னு தெரியாது..”
அதற்குள் ராஜாவை புல்லட் கையசைத்து கூப்பிட , “அப்போ பாக்கலாம் சார் .. நான் வரேன்”
“ஒ.கே ராஜா.. தாங்கஸ்..”
மணி கடிகாரத்தில் பன்னிரண்டு என்று காட்டியது. காலையில் பத்து மணிக்கு வந்தவன், இதே இடத்தில் பைத்தியம் போல உட்கார்ந்துகிட்டிருக்கேன். குழந்தைக்கு வேறு பால் பவுடர் மற்றும் பேபி பவுடர் வாங்கணும். அதையாவது செஞ்சிட்டு வந்திருக்காலாம். வெய்யில் வேற மண்டைய பொளக்குது.. எனக்குள் நானே புலம்ப ஆரம்பித்தேன். அதோ வருவது புல்லட் தானே.. அப்பாடா ஒரு வழியா வந்தான்யா இவன்..
“என்ன சார் என்ன ஆச்சு .. பாக்கலாமா அவரை ?”
“இல்ல மாமு… சார் கொஞ்சம் மூட் அவுட்.. செட்ல அவருக்கு கொஞ்சம் பிடிக்கலை.. மனுஷனை திருப்தி படுத்தறது பெரும் பாடு .. யப்பா” என்றுவிட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார்.
ஆமாம் அவர் ஆஸ்கர் ரேஞ்சுக்கு படம் எடுக்கிறார். அதுக்கு இவர் டைடானிக் ரேஞ்சுக்கு செட் போடறார். போங்கடா என்று திட்ட வேண்டும் போல இருந்தது. இவன் எல்லாம் பெரிய மனுஷன்னு இவன் பேட்டியை வேற மக்கள் எதிர் பாக்கிற இந்த கொடுமைய எங்க போய் சொல்ல.. எல்லாம் என் நேரம்.
“சார் நான் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது.. கொஞ்சம் டிரை பண்ணுங்க சார்.”
“இப்போ ரொம்ப கஷ்டம் மாமு.. “
“ப்ளீஸ் சார் , கொஞ்சம் டிரை பண்ணுங்க .. நீங்க நினைச்சா முடியாதா ?”
எனக்கே நான் ஒரு பிச்சைக்காரன் போல நிற்பதாகப் பட, குவிந்திருந்த கைகளை மெதுவாக தலை பக்கம் தூக்கி முடி கோதுவது போல ஆக்டிங் செய்தேன்.
“அதுவும் கரெக்ட தான்.. ஒண்ணு பண்ணுங்க .. நீங்க என் கூட செட்டுக்கு வாங்க நான் அவரை அறிமுகம் செய்யறேன் .. அதுக்கப்புறம் உங்க சாமர்த்தியம் .. என்ன ?”
புதுதெம்பு கொண்டவனாய் “சரி சார்” என்றேன்.
செட்டை சுற்றி அமைக்கப் பட்டிருந்த கீத்து வேலியை தாண்டி உள்ளே சென்றோம். காலையில் பார்த்த அந்த பார்க் செட்டிங்கில் இப்போது ஒரு நாலு ஜோடி சைட் ஆர்டிஸ்ட் உட்கர்ந்திருக்க, கேமரா எதிர் மூலையில் இருந்தது. செட்டின் மூலையில் ஒருவர் எருமை மாட்டை பிடித்துக்கொண்டு நின்றார்.
கேமராவின் பக்கத்தில் ஒரு சேரில் படத்தின் ஹீரோயின் கேஷன் அமர்ந்திருக்க, பக்கத்தில் அந்த மாமேதை டைரக்டர் அமர்ந்திருந்தார். ஏதோ விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். புல்லட் அங்கு போய் நின்று கொண்டு என்னை மெதுவாக அழைத்தார்.
ஹீரோயினிடம் பேசிக்கொண்டிருந்தவரை, இடைமறித்து “சார்.. ” என்றார்.
“என்ன புல்லட் என்ன விஷயம் ? சொன்னபடி ஆல்டரேஷன் பண்ணிட்டீங்க இல்ல ?”
“ஆச்சு சார்” என்றபடி என் கையை பிடித்து இழுத்து “இவர் நம்ம க்ளோஸ் ப்ரெண்ட் .. மாமு”
என்னை அறியாததால் சற்றே குழப்பத்துடன் கை குலுக்கினார்.
“எனக்கு ஞாபகம் இல்லையே ?”
“அதான் சார் நம்ம விடிவெள்ளி பத்திரிகை இல்ல, அதோட சீப் எடிட்டர் கம் ரிப்போர்ட்டர்..”
அதுவரை ஏதோ ஸ்வாரசியமாய் எதிர்பார்த்தவர், பத்திரிகை என்றதும் முகம் சற்றே கோணல் ஆகியது.
“ஓ.. ஓ.கே.. எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..”
“நீங்க எப்போன்னும் சொல்லுங்க .. மாமு வெய்ட் பண்ணுவார்” என் சார்பாக புல்லட்டே முடிவு எடுக்க ஆரம்பித்தார். எரிச்சலாக வந்தது.
“இன்னும் ஒரு ஒன் அவர் .. மே பி டூ.. ஏன்னா உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் பிஸி.. எஸ்பெஷலி வித் திஸ் ப்ரோஜக்ட்..” என்றுவிட்டு “டோ ன்ட் யூ அக்ரீ மிஸ் கேஷன் ? ” என்று வழிந்தார்.
அதற்குள் புல்லட் “அப்போ இவர் இங்க இருந்து ஷூட்டிங் பாக்கறதுல பிரச்சனை ஏதும் இல்லையே சார் ..”
அவர் சந்தேகத்துடன் பார்த்துவிட்டு, “பாத்ததை பத்திரிகையில் எழுத மாட்டார்ன்னா ஒக்கே.. ஏன்னா விகடனுக்கே நான் அனுமதி குடுக்கலை.. உங்க ப்ரெண்ட்ன்னு சொல்றதுனால… என்ன சார் ஒக்கே வா ? ” என்றார்.
“ஓ.கே சார் .. ” என்றேன் பள்ளிக்கூட மாணவன் போல..
ஷூட்டிங் துவங்க ஆரம்பித்து “க்ளாப் ” செய்யப்பட்டதும், செட் அமைதியானது. நானும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
சைட் ஆர்டிஸ்ட் ஜோடிகள் நான்கு பெஞ்ச் மேலேயும், சுவரின் மேலேயும் உட்கார்ந்து கொண்டிருக்க, ஆக்ஷன் என்று சொல்லப்பட்டதும், ஹீரோயின் தன் காரை விட்டு இறங்கி , அறைகுறை தமிழில் ஏதோ ஒரு வசனம் பேச, முன்னால் நினறவர் ஏதோ பதில் சொன்னார்.
“எல்லத்தையும் ரீ-ரிக்கர்டிங் ல பாத்துப்போம் ” யாரோ ஒருவர் எப்போதோ என்னிடத்தில் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
வசனம் பேசி முடிந்தவுடன் கேஷனை இருவர் எருமை மாட்டின் மீது ஏற்றிவிட, ஒருவர் நன்றாக குனிந்தபடி அந்த எருமை மாட்டை நகரச் செய்தார்.
கேஷன் கையை உயர்த்தியபடி ஏதோ சொல்ல, சைட் ஆர்டிஸ்ட் கும்பல் சிரித்தது. உடனே கேஷன் கையைக் கொண்டு ஏதோ வீசுவது போல
சைகை செய்ய, இரண்டு கோஷ்டிகள் மயக்கம் வந்தது போல கீழே விழுந்தன.
“கட்” என்றார் டைரக்டர்.
உடனே அனைவரும் கலைந்து செல்ல, டைரக்டர் கேஷனை நோக்கி சென்றார்.
நான் கடிகாரத்தை பார்க்க மணி மூன்று என்றது. வெய்யிலின் கொடுமை வேறு .. எரிச்சலில் ஏதும் பேச முடியாமல் நின்றேன்.
“என்னங்க கொழந்தைக்கு பால் பவுடர் நேத்தோட தீர்ந்து போச்சு மறக்காம வாங்கிட்டு வந்திருங்க .. என்ன ..” ப்ரியா சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்திற்கு வந்தது.
ராஜா தென்பட, அருகில் அழைத்து ரகசியமாய் “என்னங்க.. என்ன எழவு இது ? இந்த காலத்துல இப்படி ஒரு படமா ? என்ன காமெடியா ? “
“இல்லீங்க .. அந்தம்மா கேரக்டர் உலகத்துல என்ன அநியாயம் நடந்தாலும் பொறுத்துக்க மாட்டங்களாம்.. காலேஜ் பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்டாம்.. அப்போ அவங்க ப்ரெண்ட் ஒருத்தி ராகிங்ல செத்துப் போக, அதிலிருந்து இந்த அம்மாவுக்கு அப்பப்ப இந்த மாதிரி தோண ஆரம்பிச்சிடுமாம்.. ஏதோ சிக்கோவோ .. என்னவோ சொன்னாங்க.. “
“ஓ .. ஸ்கிட்ஸொப்ரீனியா வா ?”
“அட அதே தான்.. அதுனால பார்க்ல யாரும் இல்லைனாலும் அந்த அம்மாவுக்கு இருக்கிற மாதிரி தோணுமாம். அந்த சீன் தான் இப்ப எடுத்தாங்க”
“அதுக்கு எருமை மாடு எதுக்குங்க ?”
“அவங்களுக்கு சயன்ஸ் மூவீஸ் நிறைய பாக்குற பழக்கமாம், அதுனால எருமை மாட்டை ஏதோ ஒரு விண்கலமா நினைச்சு ஏறிடுவாங்களாம்.. அதுலேயும் இந்த சீனுக்காக படம் அவார்டு வாங்கப் போவுதாம்..”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ? “
“அந்தம்மா கிட்ட டைரக்டர் பேசிக்கிட்டிருந்த போது ஓரமாய் நின்னு ஒட்டு கேட்டேன்.. ” என்றுவிட்டு காலரை தூக்கி விட்டுக் கொண்டார்.
“உங்களுக்கு தெரியுமா … இந்த வருஷம் ஆஸ்கார் வாங்கின ‘பியூட்டிபுல் மைண்ட்’ அப்படீங்கற படத்துல வர்ற மாதிரி இருக்கு இது ..”
“அப்படியா சார் ?”
“ஆமாங்க, தெறமசாலிங்க உங்க டைரக்டர்.. நல்லா உல்டா பண்றார் .. சரி நான் இப்பவாவது பேட்டி கிடைக்குதான்னு பாக்குறேன்”
பவ்யமாய் அவர் அருகில் சென்றேன். “சார்..” ஏதோ பேசிக்கொண்டிருந்தவர் திரும்பி “என்ன ” என்றார்.
“நான் தான் மாமு..”
“ஆமா அது என்னங்க மாமு ? உங்க சொந்த பெயர் கிடையாதா ? ஹியர் தட் மெடம் .. ஹிஸ் நேம் இஸ் மாமு .. இஸ் இன்ட் இட் காமிக்கல் ? ” என்றுவிட்டு கபகபவென சிரித்தார். எரிச்சலாய் வந்தது. அடக்கிக் கொண்டு “மை நேம் இஸ் ஆனந்த் சார் ” என்றேன்.
“ஒ, ஒக்கே மிஸ்டர் ஆனந்த், நான் என்ன செய்யணும் ? “
“ஒரு பேட்டி சார்..”
“பேட்டியா ? என்ன பத்திரிகைன்னு சொன்னீங்க ?”
“விடிவெள்ளி சார்..”
“நான் கேள்வியே பட்டதில்லயே.. “
“இங்க டீ. நகர்ல தான் சார் பப்லிஷ் பண்றோம்..”
“நீங்க பண்றீங்க ஆனா யாரு படிக்கிறாங்க ..” என்றுவிட்டு கபகபவென சிரித்தார். அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன். அருகே இருந்த கேமராவை தலையில் போடலாம் போல இருந்தது. ஜோக் சொல்றானாம்.சிரித்து முடித்து விட்டு அவரே “குட் ஜோக்” என்றுவிட்டு
“ஸோ உங்களுக்கு பேட்டி வேணுமா ? குடுத்திட்டா போச்சு … நீங்க ஒண்ணு பண்ணுங்க நாளைக்கு இதே டைமுக்கு இங்க வந்திருங்க.. அப்ப வச்சிக்கலாம்.. என்ன “
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, புல்லட் வந்து “வந்துடுவார் சார்” என்றபடி என்னை தள்ளிக்கொண்டு வந்தார்.
“என்ன சார் இது .. உங்களுக்கே தெரியும் நான் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிகிட்டிருக்கேன்.. “
“என்ன செய்ய மாமு .. இதெல்லாம் இப்படித்தான். நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க .. அப்ப பாப்போம்”
“நாளைக்கு மட்டும் கன்பர்ம்டா ?”
“அதெல்லாம் சொல்ல முடியாது.. நாளைக்கு வாங்கன்னா வாங்க .. ஓ.கே ? எனக்கு இப்ப நின்றைய வேலை இருக்கு..” என்றுவிட்டு சென்றார்.
“மத்தியானத்துக்குள்ள குழந்தைக்கு வேண்டியத வாங்கிட்டு வந்திருங்க.. இருக்கிறது தீர்ந்து ரெண்டு நாள் ஆகுது.. ரெண்டு நாளா சொல்லிகிட்டிருக்கேன்.. என்ன “
ப்ரியா சொன்னது ஞாபகத்துக்கு வர, கடிகாரத்தை பார்த்தான். மணி ஐந்து என்றது.
எரிச்சலில் எதையாவது எட்டி உதைக்கவேண்டும் போல இருந்தது. வாசலில் ‘ரோஜாத்தோட்டம்’ என்று போர்ட் வைத்திருந்தார்கள்.
சிரிப்பு தான் வந்தது.
*****
தேன்கூடு

10:15 PM.‘பதினைந்து, பதினாறு …. அதோ இருக்கு..ஆனா ஜன்னல் ஓரம் இல்ல. ஓக்கே..சமாளிச்சிடலாம்.. முன் சீட்ல இருக்கிற இந்த வயசான பெரியவரைத்தவிர யாரையும் காணோம். கொஞ்சம் இட நெருக்கடி இல்லாம உக்காரலாம்..மொதல்ல கொஞ்சம் தண்ணி … அப்புறம் தான் மத்தது..’ ‘அப்பாடா.. இப்ப தான் ப்ரெஷ்ஷா இருக்கு.. சரி பேக்கை கீழே சங்கிலியால் கட்டியாச்சு..அப்புறம் இந்த ஃபேனை போட்டுட்டா வீ வில் பீ ஆல் செட்..ஓக்கே … வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிஷம் இருக்கு..என்ன செய்யலாம் ? ஓ.க்கே.. ஒரு தம் போடலாம்.’ வண்டியை விட்டு கீழே இறங்கியதும், சில்லென வீசிய தென்றலில், சற்றே உற்சாகமானேன். ஒரு வில்ஸை பற்றவைத்தேன். அந்த குளிருக்கு, புகையை நுரையீரல் தாண்டி இழுக்கத்தோன்றியது. சில விநாடிகள் கண்ணை மூடினேன். நெருப்பு சிகரெட்டை முழுவதும் தின்னும் வரை இழுத்திருப்பேன். பாக்கெட்டில் இருந்த போலோவை எடுத்து ஒரு வில்லையை வாயில் போட்டுக்கொண்டேன். வண்டியின் உள்ளே ஏறி, என் இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். இடப்பக்கத்தில் ஒருவர் தூங்கிய வண்ணம் இருந்தார். அது எப்படி சிலருக்கு வண்டியில் ஏறியவுடன் தூக்கம் வருமோ தெரியவில்லை. வலப்பக்கத்தில் ஜன்னலோர இருக்கை காலியாக இருந்தது. பேக்கில் இருந்து சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலையை கையில் எடுத்தேன்.பக்கங்களின் நடுவே மடிக்கப்பட்டிருந்த பக்கத்தை தேடி கண்டுபிடித்தேன். “இந்த புக்ஸ்ல எல்லாம் பக்கத்தை மடிச்சு அடையாளம் வெக்கிறவங்களை பாத்தா அவ்வளவு எரிச்சல் வரும் எனக்கு ..” யாரோ என்னிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.தொழிற்சாலைக்குள் நுழையப் போன என்னை ஏனோ அந்த மின்விசிறியின் சத்தம் தடுத்தது. படிப்பதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று மூளை சொன்னாலும், ஏனோ ஒன்றில் மனம் பதிய மறுக்கும் போது குண்டூசி விழும் சத்தம் கூட பெரியதாய் கேட்கிறது. எத்தனை சத்தம் , இறைச்சலுக்கு மத்தியில் கூட ஒரு பக்தனால் தன் இறைவனிடம் முறையிட முடிகிறது.விட்டால் பறந்து போய்விடத் தயாராய் இருந்த கவனத்தை திசைதிருப்புவது சற்று கடினமான விஷயம் தான்.
சரி எங்கே விட்டேன்.. மறுபடி பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். மறுபடியும் அந்த மடித்து வைத்த பக்கத்தை அடையாளம் கண்டேன். மறுபடியும்
நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வர, மறுபடி சிந்தனை குதிரை வேலி தாண்டி ஒடத்துவங்க பிடித்து இழுத்து வருவதற்குள் போதும் என்றானது.
சிறிது நேரம் புத்தகத்தை மூடிவைத்து ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்த்தேன். ப்ளாட்பாரத்தில் பார்ப்பதற்கு தாஜ்மகாலா இருக்கும்.
சிமெண்டு பெஞ்சை சில விநாடிகளுக்கு மேல் வெறிக்கத் தோன்றவில்லை. மறுபடி புத்தகத்தை திறந்தேன். சொல்ல மறந்து விட்டேனே.. போன முறை மூடும் போது என் விரலை இடையே வைத்து மூடியிருந்தேன். அதை நினைத்தவுடன், அந்த நண்பன் என் முதுகில் தட்டி பாராட்டுவது போல் தோன்ற, ஓட இருந்த குதிரையை மறுபடி கட்டி இழுத்து வந்தேன். யப்பா.. சிந்தனையை ஒருமுகப்படுத்துதல் இவ்வளவு சிரமமான விஷயமா ?
“சிந்தனைகளை தன் கட்டுப்பாடிற்குள் வைத்திருப்பவனை ஞானி என்கிறோம்.. விவேகானந்தரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் மற்றும் பல ஞானிகளும் செய்து வந்தனர்” ஏதோ ஒரு டி.வியில் யாரோ ஒருவன் சொன்னது.அப்படியானால் விவேகானந்தரால் நான் இருக்கும் இந்த மன நிலையில் கனவுத்தொழிற்சாலையை முழுவதுமாக படித்ருக்க முடியுமா ? மனத்தை ஒருமுகப்படுத்துதலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ?
வண்டி நகரத்துவங்கியதினால் நான் முன்னால் தள்ளப்பட, என்னை ஏமாற்றி விட்டு என் குதிரை நைசாக வெளியேறிக் கொண்டிருக்கிறதை உணர்ந்தேன். என்னப்பா இது .. எதை பற்றியும் சிந்திக்கக் கூடாதா ? என்ன விளையாட்டு இது.. எனக்குள் இருந்து இன்னொரு நான் கேட்க, நான் பதில் இல்லாமல் குழம்பினேன். என் மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட நான் எனக்கு மேலும் விளக்கங்கள் தர முனைந்தேன்.. மறுபடியும் அந்த டி.வி சேனல் போதனை வந்து போக.. என்ன சேனல் அது ? சன்னா இல்லை ராஜ் டி.வியா.. சன் தான் .. இல்லை விஜய் டி.வியோ ? காலையில் வந்த ஒரு நிகழ்ச்சி அது.. ஹலோ தமிழாவா ? சே.. இல்லை அதில் சினிமா துறை தான் வலம் வரும்.. ஸ்ரீகாந்த், ஸ்னேகா, பரத் இப்படி பலர்.. காம்பெயர் பண்ணும் மமதி சாரி இஸ் அட்ராக்டிவ்..”மச்சி நல்ல பிகர்டா அவ ..” குமார் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. என் கூட ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வராம ஏமாத்திட்டியே.. திரும்பப் போனதும் கேக்கணும்.. கேட்டாலும் என்ன சொல்லப் போறான்.. இப்ப தான் கல்யாணம் ஆனவன்.. எவ்வளவோ இருக்கும்.. “ஏன்டா குமார் .. ஒன் கல்யாணம் ஆயாச்சு .. இவனுக்கு எடுத்து சொல்லக் கூடாதா ? நான் என்ன சொல்றது அவனையே கேளுங்க.. ” அம்மாவும் குமாரும். தொண்டையில் ஒரு வித வரட்சி தோன்றி குதிரையை மறுபடி கூண்டில அடைத்தது.
பிஸ்லெரியை வாயில் கவிழ்த்தி ஜில்லென்ற தண்ணீர் தொண்டையில் இதமாய் இறங்க, கண்மூடியபடி தண்ணீர் பருக ஆரம்பித்தேன். “எக்ஸ்கியூஸ் மீ..” என்ற குரல் கேட்டதும் திரும்பினேன். அவள் அழகாக இருந்தாள். ஜீன்ஸும் டீஷ்ர்டும் உடும்புப் பிடியாய் உடம்பை கவ்வியிருக்க, அத்தனை அழுத்தத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. டீஷர்ட்டையெல்லாம் போட்டுக்கொண்டுதான் தைத்திருப்பாளோ…
“எக்ஸ்கியூஸ் மீ..”
மீண்டும் ஒரு முறை கவனம் கலைக்கப்பட்டேன்.
“எஸ்”.
“என்னோட சீட்ல உக்காந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. “
“யாரும் இல்லைன்னு தான் ஜன்னலோரம் உட்கார்ந்தேன்..ஸாரி.. “
“தட்ஸ் ஓகே…”
என்னை தாண்டி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். மெலிதான வாசனை இதமாய் நாசியை துளைத்தது. சிலருக்கு தான் இதுபோல் மென்மையான செண்ட் வகையறாக்களை தேர்ந்தெடுக்க தெரிந்திருக்கிறது. ஆபீஸில் ராதா உள்ளே வருவது கேபினில் உட்கார்ந்தபடியே உணர முடியும். தான் வருவதை அறிவிப்பது போல இருக்கும் அது. அருகில் இருந்தால் வாசனையின் வீரியம் இதத்திலிருந்து இம்சையாய் மாறும். “இவங்களெல்லாம் குளிக்க மாட்டளுங்க போல.. ” என்ற விமர்சனங்கள் தன்னிச்சையாய் பறக்கும். ஒருவேளை பெண்களுக்குகுரிய பிரச்சனை
நேரத்தில் இந்த செண்ட் வீரியம் அதிகம் இருக்குமோ ?..
“எக்ஸ்கியூஸ் மீ.. “
குதிரை மறுபடியும் திரும்ப வந்தது. அவள் என்னை பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
“ஐயம் ஸாரி.. எஸ்… “
“கொஞ்சம் தள்ளிக்கிறீங்களா.. நான் வெளியே போகணும்.. “
ஏனோ எழுந்திருக்க தோன்றாததால், காலை மட்டும் ஒரு திசையில் குறுக்கிக்கொண்டேன். அவள் என்னை உரசிக் கடந்து போனாள்.
வளைவுகளின் வசீகரம் நேர்கோடுகளில் இல்லை தான். ஒருவேளை கல்லூரி மாணவியாக இருக்குமோ ? இல்லை பள்ளி மாணவியாகவும் இருக்கலாம். இந்த காலத்தில் யார் எந்த வயது என்பது சரியாக சொல்ல முடியாத ஒன்று.. ராம் அடிக்கடி பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அவன் தெருவில் இருந்த சேட் பிகர் ஒரு நாள் ஸ்கூல் யூனிபார்மில் வந்த அவனுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்திருக்கிறாள். “மச்சி கடுப்பாயிடுச்சி டா.. அவ ஸ்கூல் படிக்கிறாடா… அதுவும் கொடுமைய கேளு.. அவகிட்ட நேத்து பேசினேன்.. அங்கிள்ன்னுட்டா.. ” ராம் எப்போதும் இப்படித்தான்..
எதிலும் ஆராய்ந்து செயல்படுவதில்லை.. என்ன இப்போது பக்கத்து தெரு பிகரை பார்க்க ஆரம்பித்திருக்கிறான்.. இதிலும் அதுபோல ஏதாவது
எதிர்பாராமல் இருக்குமோ ?
“எக்ஸ்கியூஸ் மீ… “
மறுபடி அவள். இந்த முறை எழுந்து வெளியே வந்து நின்றேன். அவள் உள்ளே நுழைந்த படி “தேங்க்ஸ்..” என்றாள்.
“நோ ப்ராப்ளம்..” அதற்கு மேல் ஏதோ பேசத் தோன்றினாலும் .. கோர்வையாய் ஒன்றும் கிடைக்காமல் போக, கொஞ்ச நேரம் இருவரும் பார்த்துக் கொண்டு பின்னர் அவள் திரும்பிக் கொண்டாள். ஏதாவது பேசியிருக்க வேண்டுமோ ? “மச்சி.. பிகருங்க தானா முன்னுக்கு வந்து பேச மாட்டாங்க.. நம்ம தான் பேச்சை வளர்க்கணும் மச்சி..” ராமு எப்போதும் ஏதாவது போதித்து கொண்டே இருப்பான். அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு. எந்த ஒரு விஷயத்திற்கும் அவனிடத்தில் ஒரு அபிப்பிராயம் இருக்கும். தெரிகிறதோ இல்லையோ, பழக்கமோ இல்லையோ, அவனிடத்தில் ஒரு போதனை காத்து இருக்கும்.. நானும் பல சமயங்களில் இது சரியா என யோசித்து இருக்கிறேன்.. பலருக்கு இந்த பழக்கம் இருக்கிறது.. கேட்காத போது கூட தங்கள் அபிப்பிராயத்தை தெரியப்படுத்துவது. இதையே ஒரு நெருங்கிய நண்பன் செய்தால் சொல்லமுடியாமல் திணறும் சந்தர்பங்கள் வாய்க்கும்..கனவுத் தொழிற்சாலை காலில் விழுந்து குதிரையை கூட்டி வந்தது..எதற்காக எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறேன் ? இன்று கனவுத் தொழிற்சாலையை படித்து முடித்தாகவேண்டும்.
கடிகாரத்தை பார்த்தேன். 11:00 PM என்றது. மெதுவாக திரும்பிப் பார்த்தேன். அந்த பெண் கைகளால் கண்களின் மேல் போர்வை அமைத்து உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இந்தப் பக்கம் திரும்பினால் அந்த வயதானவர் நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, கையில் இருக்கும் புத்தகத்தை பார்த்தேன், ஒரு மணி நேரமாய் என் கையில் இருந்து, கீழே விழந்து என தொய்ந்து தான் போயிருந்தது. அதை படித்து முடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“எக்ஸ்கியூஸ் மீ..”
இன்னும் இவள் உறங்கவில்லையா ? என்ன வெளியே செல்ல போகிறாளா ? இல்லை என்னை ஏதாவது கேட்கப்போகிறாளா ? எங்கே போகிறீர்கள் என்று கேட்பாளா .. சே என்ன மடத்தன்மான கேள்வி.. கேள்விகளுக்காய் பலவித கேள்விகள்.. திரும்பி “எஸ் ..” என்றேன். அப்பாடா .. எத்தனை சரியான கேள்வி..
“உங்களுக்கு ப்ராபிளம் இல்லன்னா, கேன் வீ சுவிட்ச் ஆப் தி லைட் .. நேரம் இப்போ 11:00. நீங்க படிச்சிகிட்டிருந்தீங்க, அதான் முன்ன கேட்க தயங்கினேன்.. பட் ஐ ஹாவ் டு ஸ்லீப் ..யு நோ..”
“ஷ்யூர்…”
கனவுத்தொழிற்சாலையை ஒரு முறை பார்த்தேன். இருள் சூழ்ந்த பின்னும் விழித்து கொண்டிருக்கிறேன்.
******
கலர் கனவுகள்
மாலை வெய்யில் மலைகளின் பின்னே மறையும் நேரம்.கம்பி வேலியில் கால் வைத்தபடி அந்த அஸ்தமனத்தை வெகுநேரம் வெறிக்கத் தோன்றியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைதொடர்கள். காலையில் பசுமை போர்த்தி இருந்தவை, இப்போது கரும்பொன் நிறத்தில் மின்னுகின்றன. மாலை நேரங்களில் பல முறை இந்த இடத்திற்கு வந்து நின்றிருக்கிறேன். அது ஏனோ தனிமையில் கிடைக்கும் ஏகாந்தம் ஒரு சுற்றுலாவிலோ, அல்லது வேறெதிலோ கிடைப்பதில்லை. கடைக்காரன் கடையை மூடுவதற்குமுன் கணக்கு பார்ப்பதுபோல, மாலை நேரங்களில் இங்கு வந்தால் செய்த செயல்களை நினைத்து பார்க்கத்தோன்றும். கம்பி வேலிக்கும் எதிரே இருக்கும் மலைத்தொடருக்கும் இடையே உள்ள இடைவெளி ஏனோ ஒருவித தனிமையை மனதிற்குள் கொண்டு வரும். இந்த இடம் பல சமயங்களில் பல சிந்தனைகளை தோற்றுவிக்கும். வெற்று இடைவெளிக்கும் எனக்கும் ஏதோ வார்த்தை பரிமாற்றம் நடப்பதாய் மனது உணரும். நாம் சொல்வது அத்தனையும் முழுமையாய் பொறுமையுடன் கேட்கும் ஒரு நண்பனாய் மனது உணரும்.இன்னும் பலப்பல. சில நேரங்களில் “இன்று என்ன பெரிதாகச் சாதித்தாய் ?” என்று கேட்கும். இவை, சோர்வுற்று ஆறுதல் தேடும் மனதின் குழப்பங்களா, இல்லை வித்தியாசம் தேடி அலையும் மனது விரும்பிச் செல்லும் இடமா ? .. தெரியாது. ஆனால் தெரிந்து சில சமயங்களிலும், அறியாமல் சில சமயங்களிலும் கால்கள் என்னை இங்கே கொண்டு வந்துவிடும்.
ஒன்றல்ல இரண்டல்ல, பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. காலத்தின் மாற்றத்தை என் தளர்ச்சி சொன்னாலும், மனது மட்டும் மாராத ஏக்கத்தோடே இன்றும் அலைகிறது. ஸ்குவாஷ் கோர்ட்டிற்குள் அடிக்கப் பட்ட பந்தாய் எல்லா திசைகளிலும் சென்று திரும்பி வரும். காரணம் மட்டும் விளங்காத ஒன்று.
“என்ன சீனா, ரிஸல்ட் என்ன ஆச்சு ? ” .. பாலா கேட்டான்.
“1073 அவுட் ஆப் 1200″ ..என்றேன். “சூப்பர் மார்க்குடா ! கலக்கு போ! நான் 1003. ஆயிரம் எடுத்ததே பெரிய விஷயம்… நீ கலக்கு”.
அம்மாவின் முகத்தில், நான் ஒரு தடை தாண்டியதில் மகிழ்ச்சி.
“நீ சொன்ன மாதிரி என்டரன்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டோ ம் மா.. நானும் பாலாவும் சேர்ந்துதான் போகப்போறோம்..”
பொருட்காட்சியை பார்க்கப் போன ஒரு மனநிலையில் இருவரும் சென்று, எதற்கு இதை எழுதுகிறோம் என்று அப்போது நினைத்ததுண்டு. மூன்று மாதங்கள் கழித்து முடிவுகளும் வந்தது. பாலா ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தான் முதலில். இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் சிறிதும் இருந்ததில்லை எனக்கு. சொல்லப்போனால் ரொம்ப இதமான நாட்கள் அவை. காலையில் மெதுவாக எழுந்து, எல்லோரும் அரக்க பறக்க ஓடுவதை வேடிக்கைப் பார்த்தபடி காபி குடிப்பதில் ஒரு தனி சுகம் இருந்தது. ஏதோ ஜெயித்த மாதிரி ஒரு நினைப்பு.
எனக்கு அப்போது சினிமாவில் ஏதாவது செய்ய ஏதோ ஒரு மோகம். ஆனால் வீட்டில் கேட்பதற்கு ஏதோ பயம்.
கொஞ்ச நாட்களிலேயே அம்மா என்னை ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டாள். தினமும் விடியலில் சென்று பின்னிரவில் திரும்பினேன். பல நாட்கள், ஓடும் ரயிலின் ஜன்னல் கம்பியின் வழியே வெளியே வெறித்தபடி ப்ரயாணித்திருக்கிறேன். ஏன் இப்படி தினமும் ஓடுகிறேன் ? எதற்காக இந்த போராட்டம் ? யாரிடம் அங்கீகாரம் தேடுகிறேன் ?
இன்னும் கேள்விகள் ஓராயிரம். வயதுக்கோளாருகளும் சேர்ந்துகொள்ள பல நேரங்களில் யாரும் அற்ற ரயில்வே ப்ளாட்பாரங்களில் தனியே அமர்ந்திருக்கிறேன். பலர் என்னை பார்ப்பதுபோல் ஒரு நினைவு தோன்றும் அப்போது.
“உனக்கு என்ன ஹீரோன்னு நெனப்பா? இது ஒண்ணும் சினிமா இல்லை.. உன்ன பாத்துகிட்டிருக்கவங்க.. யாரும் இல்லை …அவனவன் அவனவ வேலைய பார்த்துக்கிட்டிருகாண்டா .. சும்மா கனவுலகதுல மெதக்காதே..”
கற்பனைகளில் சுகம் கண்ட பல நாட்களில், என்னை பாலா தரைக்குக் கொண்டு வந்தான். வருடங்கள் நான்கு, இப்படியே கழிந்தது. வித்தியாசம் என்னவென்று தெரியவில்லை. ஏதேதொ கற்று கொடுத்ததாய் சொன்னார்கள்.. காசு மட்டும் தண்ணீர் போல செலவாகியது. (அப்போது இவ்வளவு தண்ணீர் பஞ்சம் இல்லை). பட்டம் பெற்று 3 மாதங்கள் ஓடியும், வேலை ஏதும் கிடைக்கவில்லை. எழுதிய நுழைவுத் தேர்வுகளையெல்லாம் ஒன்றுமே தோன்றாமல் எழுதினேன். பெயர் வராதபோது சற்றும் வருத்தம் இல்லை. ஏனென்று தெரியவில்லை. அந்த 6 மாதங்கள் மீண்டும் சுகமான வாழ்க்கை. உண்பதற்கும், உறங்குவதற்கும் மட்டுமே வீடு எனக்கு இடமாகியது. ஆனால் ஏனோ மிகவும் இதமான நாட்கள் அவை.
உச்சந்தலையில் ஐஸ் வைத்தது போல், மழைத்துளி ஒன்று மண்டையிலும், மனக்குளத்திலும் விழுந்து நினைவலைகளை கலைத்தது. இருட்டத் துவங்கி இருந்தது. மங்கி காப்பை தலையில் மாட்டினேன். இந்த இடம் நான் நினைவுகளை அசை போடும் நிலையமாகவே மாறிவிட்டது ஆச்சர்யமாக இருந்தது. முன்பெல்லாம் அந்த அஸ்தமனத்தை பார்ப்பதற்காகவே இங்கே வரத்தோன்றும். மெதுவாக வீட்டை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தேன். ஏனோ ஒரு ஏமாற்ற உணர்வு,. முதுகின் பின்னால் நின்று கொண்டு அடக்க முடியாமல் சிரித்துக் காண்டிருப்பது போல தோன்றும். நடந்து கொண்டே வந்ததில், என் வீடு இருந்த தெருவை அடைந்து விட்டிருந்தேன். பக்கத்து வீட்டு மாமி தன் மகனை திட்டிக் கொண்டிருந்தாள்.
வாசல் வரை கேட்டது மாமியின் சப்தம்.
“இத பாரு ரகு, அங்க வந்தேன் பிச்சிடுவேன்.. சொல்லிட்டேன்.. என்ன நினைச்சிக்கிட்டிருக்க நீ ? நாளான்னக்கு எக்ஸாம் வச்சிக்கிட்டு இன்னிக்கு உனக்கு சினிமா கேக்குதா ? மரியாதையா வந்து புஸ்தகத்த எடு ..”
“நான் படிச்சுட்டேன் மா …”
“கிழிச்ச .. அதான் நீ வாங்கற மார்க்கு சொல்லுதே .. ஒவ்வொரு தடவையும் இதத்தான் சொல்ற .. இந்த தடவை நான் விடமாட்டேன் ..”
அவர்களின் வாக்கு வாதம், பெய்யத் துவங்கிய மழையைப் போல வலுக்க ஆரம்பித்ததால், ஓட்டமும் நடையுமாய் என் வீட்டிற்குள் சென்றேன்.
தலையைத் துவட்டிக் கொண்டே சன்னலை மூடப்போனேன். எதிர் சன்னலில், கையில் புத்தகத்துடன் சொட்டும் மழைத்துளியை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான் கார்த்திக்.
“கார்த்திக் ..”
அவன் பார்வை மழைத்துளியின் மேல் குத்திட்டு நின்றது.
“கார்த்திக் ,, ஏய் .. உன்னதான்..”
நினைவு கலைந்து நிமிர்ந்தான். கண்கள் லேசாக பனித்திருந்தது. அதை மறைப்பதற்காக கீழே ஏதோ தேடுவது போல குனிந்தபடி, கைகளால் கண்ணீர் துளிகளைத் துடைத்துக்கொண்டான்.
நிமிர்ந்து “என்ன அங்கிள் , எப்ப வந்தீங்க ? வாக்கிங் முடிச்சாச்சா ?”
“முடிச்சாச்சு.. ஆமா ஏதோ சத்தம் கேட்டதே.. அம்மா திட்டினாங்களா ? “
முதலில் பதில் சொல்ல முடியாமல் தவித்து, பின்னர் “எப்ப திட்டலை ” என்று எனக்கு கேட்கும்படி முணுமுணுத்தான். கோவத்தில் வெறிக்கும் அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.
“அம்மா சொல்றது நியாயம் தானே பா ?”
“சும்மா இருங்க அங்கிள்..உங்களுக்கு தெரியாது ..”
“இல்லப்பா அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றாங்க.. எனக்கு உன் வயசு இருக்கும் போது எங்கம்மாவும் இத மாதிரி தான்..” என்றதை அவன் சுத்தமாய் நம்பவில்லை என்பது அவன் பார்தத பார்வையிலேயே தெரிந்தது.
“நீ பத்தாவது எக்ஸாம் பாஸ் பண்ணினாத்தான் அடுத்த ஸ்டெப்.. “
“அதுக்கு அப்புறம் ..” என்றான். ஏதோ கிண்டல் செய்வது போல தோன்றினாலும் மேலும் தொடர்ந்தேன்.
“அப்புறம் 12த் பாஸ் பண்ணினாத்தான் இன்ஜினியராகவோ இல்ல டாக்டருக்கோ படிக்க வாய்ப்பு இருக்கு..”
“ஆகி என்ன செய்ய அங்கிள் ..”
“ஆகி .. ஆகி ..” லேசாக தடுமாறித்தான் போனேன்.. சமாளித்து ..” கை நிறைய சம்பாதிக்கலாம்.. டீ.வீ, டெக் , கார் எல்லாம் வாங்கலாம். இன்னும் நிறைய ..”
அவன் ஏனோ மவுனம் சாதிக்க, “அந்த சினிமா எங்க போகப் போவுது ? இன்னிக்கு இல்லன்னா நாளைக்கு.. எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம்.. எக்ஸாம் அப்படி இல்ல ..”
“நீங்க வேற அங்கிள்.. எக்ஸாம் நாளன்னைக்கு தான்.. அது தவிர நான் ஏற்கனவே 70 பர்சென்ட் படிச்சிட்டேன்.. மிச்சதை நாளைக்கு படிக்க வச்சிருக்கேன்.. எங்கம்மா கத்தறதை கேக்குறவங்களுக்கு நான் ஏதோ படிக்கவே இல்லாத மாதிரி பீல் பண்ணுவாங்க.. ரெண்டாவது , நான் பாக்கப் போறேன்னு சொன்னது இங்க ஒரு தியேட்டர்ல வந்திருக்கிற இங்லீஷ் படத்தை. கேள்வி பட்டிருபீங்க.. ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்’ன்னு நாலு ஆஸ்கர் வாங்கி இருக்கு அது..இந்த கலர் பிலிம் ஜெனரேஷன்ல முழுக்க முழுக்க ஒரு ப்ளாக் அந்த் ஒயிட் பிலிம். நாசி சர்வதிகாரத்தை தத்ரூபமா படம் பிடிச்சிருக்காங்களாம். நம்ம ஊர் தியேட்டர் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே .. இன்னிக்கி தான் கடைசி.. ஒரு வாரம் கூட ஓட்டலை .. இந்த கொடைக்கானல்ல அந்த படம் வீடியோ கடைக்கு வர ரொம்ப நாளாகும்.. அப்படியே வந்தாலும், தியேட்டர்ல பாக்குற எ-பக்ட் வராது.. அதுவும் இந்த படத்துல விஷுவல் எபெக்ட் நல்லா இருக்குன்னு ரிவ்யூல படிச்சேன்..ஆனா அதெல்லாம் இவங்களுக்கு எங்க புரியப் போவுது ? ” என்றபடி மூச்சு வங்கியவனை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. கோலியும் கில்லியும், கிரிகெட்டும் மட்டும் என்ஜாய் பண்ணும் விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்த எனக்கு, இவன் முதன் முறையாய் இவ்வளவு பேசியது ஆச்சர்யமாக இருந்தது. இவனுடைய வயதில் இவன் அறிந்திருந்தவற்றில் பாதியை அறிந்திருப்பேனா என்பது சந்கேம். ஆச்சர்யத்தில் வார்த்தைகள் வரவில்லை எனக்கு.
நான் திகைத்து நிற்பதை பார்த்த அவன் ” அங்கிள் , நான் இவ்வளவு விரிவா சினிமா பத்தி பேசினேன்னு எங்கம்மா கிட்ட சொல்லிடாதீங்க.. அப்புறம் வீட்ல எப்பவாவது பாக்க சான்ஸ் கிடைக்கிற படங்களும் இல்லாம போயிடும். அம்மாவுக்கு சினிமான்னாலே பிடிக்காது..”
“அப்ப உனக்கு சினிமான்னா அவ்வளவு பிடிக்குமா ?”
“பிடிக்குமாவா ? ஐ லவ் இட்..எப்ப பாத்தாலும் வர ஸ்டான்டர்ட் லவ் மூவீஸ் மாதிரி இல்லாம ஏதாவது புது தீம்ல மூவீஸ் பாக்க இன்ட்ரெஸ்ட்.”
“அப்போ உனக்கு பிலிம் லைன்ல போக இன்ட்ரெஸ்ட் இருக்கா ?”
“நிறைய இருக்கு.. கொஞ்சம் புக்ஸ் கூட வாங்கி வச்சிருக்கேன்… ஆனா எங்க …எல்லாம் பேச்சோடத்தான்..”
“கார்த்திக் அங்க என்ன கத அளந்துகிட்டிருக்க ? “
“இல்லம்மா .. அங்கிள் கிட்ட டவுட் கேக்கறேன் ” என்றுவிட்டு கண்ணடித்தான்.
அதற்கு மேல் ஏதுவும் பேசத் தோன்றவில்லை. அறிவுரைகள் அவனுக்கு தரவேண்டுமா இல்லை நான் பெற வேண்டுமா என்று குழப்பம் தோன்ற “ஓக்கே பா நான் சமைக்கணும்.. அப்புறம் பாக்கலாம்” என்றுவிட்டு உள்ளே வந்தேன்.
டின்னரை முடித்து, படுக்கையில் விழுந்து வெகு நேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை. ஏனோ கார்த்திக்கை நினைக்கும் போது என் சிறு வயதை நானே பார்ப்பது போல தோன்றியது.
புத்தகங்களை புரட்டியதில் உடனே உறக்கம் வர எப்போது உறங்கினேன் என்று தெரியும் முன் உறங்கிப் போனேன். நீதிமன்ற அறையின் குற்றவாளிக் கூண்டில் நான் நிற்க என் எதிரே கார்த்திக் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து “நீங்கள் எல்லோரும் இதுபோலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். கடமையை செய்கிறோம் என்று கூறி, உங்களுக்கு கிடைப்பதை உங்கள் கடமையாக்கிக் கொள்கிறீர்களே ! தினப்படி தேவைகளை பூர்த்தி செய்வதே நீங்கள் பிறந்ததின் நோக்கமாய் நினைத்து வாழ்கிறீர்கள். அதை தொடர்ந்து செய்பவர்களை, இந்த சமுதாயமும் மதிக்கிறது. ஆனால் இந்த வாழ்க்கை முறையில் என்னை தள்ள உங்களுக்கு அனுமதி இல்லை.செய்ய விரும்பியதை விட்டு ஏதோ ஒன்றை செய்யும்படி என்னை பணிக்க உங்களுக்கு உரிமையில்லை. பசியும், இடமும் ஆட்டி வைக்கும் பொம்மைகளாகி, விரும்பியதை விட்டு, கிடைத்ததை -சய்து, இறுதியில் இறந்தும் போகவா நாம் இங்கே வந்தோம் ? ” கார்த்திக் கைகளை ஆட்டிப் பேசியதில், கனவு கலைந்து திரும்பினேன். பக்கத்தில் இருந்த விளக்கைப் போட்டு, மேஜை மேல் இருந்த காகிதத்தில், அவன் சொன்ன பெயர் மறந்து போயிருந்ததால், எஸ்.லிஸ்ட் என்று எழுதினேன். இதை எங்காவது தேடி வாங்கி வைக்க வேண்டும். “கார்த்திக் ! கோடைக்கால விடுமுறையில் நீ இந்த படத்த பாக்குற .. அதுக்கு நான் காரண்டி..” மனசுக்குள் முணுமுணுத்தபடி, விளக்கை அணைத்து படுக்கையில் சரிந்தேன்.
********
தேடல்
இருண்டு கிடக்கும்
பனிப் பிரதேசங்கள்,
சருகுகள் சரசரக்கும்
நெடுமரங்கள் இடை பாதை,
புவியீர்ப்பு விசை
பொய்த்துப் போகும் உயரங்கள்,
குளிர் போர்வையால் தழுவும்
ஆழ்கடல் பிரதேசங்கள்,
வெய்யிலின் வெம்மையில்
வாய் பிளந்த வறண்ட பூமி
என
கல்லூரி காலங்கள்,
வீணில் பொழுதுகள்,
கோடை காலங்கள்,
குளிர் காலங்கள்,
இதுபோல் இன்னும்
பற்பல காலங்களில்,
பற்பல நேரங்களில்,
தேடி தேடி,
உணர்வுகள் உலர்ந்து,
நினைவுகள் கடந்து,
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான உன்னை.
உறவுக்காலம்
என் மனக்குளத்தின் மத்தியில்
கல் எறிந்து
நீரலைகள் நிற்கும் முன்
காணாமல் போனவளே !
பார்வை நிலைகொளல்களும்
வார்த்தை பரிமாற்றங்களுமாய்
மேகக்கூட்டத்தின் மத்தியில்,
வானவில்லின் வண்ணம் கொண்டு
எழுதப்பட்டதொரு ஒப்பந்தம்,
நூலறுந்த காற்றாடியாய்
இன்று தெருவோரம் கிடக்குதடி !
எதிர்பார்ப்புகள் என் உத்திரத்தில்
கட்டப்படும் சிலந்தி வலைகள்.
ஏமாற்றங்கள்
என் வீட்டு முன் அறையை
அலங்கரிக்கும் தோரணங்கள்.
சிந்தனைகளை
சிந்தனைகள் கொய்து செல்ல
மிச்சமாய் கிடக்கும்
பச்சையமற்ற பிரதேசங்களில்
சருகாகிக் கிடக்கும் உன் நினைவுகள்.
துவக்கத்துக்காய் நான் எழுதிய
கவிதை
முடிவுரையாய்
முகமற்றுப் போனது எப்படி ?
என் நிழலைத் தின்றது
இரவோ இல்லையோ,
தக்க வைத்துக் கொள்ளாதது
என் தவறு தான்.
விலகலுக்குப் பின் தான்
விளங்குகிறது.
வெட்டினால் வளர்வது
நகம் தான்,
அகம் அல்ல.